கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை வடகொரியா சோதித்தது. இது ஒரு வாரத்துக்குள் நடத்தப்பட்ட 2ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும்.

இதுகுறித்து தென்கொரியா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகாங் மாகாணத்தில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 700 கி.மீ. வரை பறந்து, கடலில் விழுந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. அதே சமயம் வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதித்தது போல மீண்டும் ஒரு ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்திருக்கலாம் என தென்கொரியாவை சேர்ந்த வல்லுனர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை தங்கள் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கு வெளியே விழுந்ததாக ஜப்பான் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஜப்பானை சுற்றியுள்ள கப்பல்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பை அதிகாரிகள் பரிசோதித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா கூறினார்.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து, தென்கொரியா நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்டி விவாதித்தது. இது வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் குறித்து வலுவான வருத்தத்தை வெளிப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here