பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 31 :
நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தன்னை ஆதரிக்குமாறு பெரிக்காத்தான் நேஷனல் (BN) கட்சியிடம் “கெஞ்சினார்” என்று வெளியான செய்திகள் தொடர்பாக பிரதமரின் உதவியாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ முகமது அனுவார் முகமட் யூனுஸ், ஒரு செய்தி இணையதளம் (a news portal) மற்றும் இரண்டு வலைப்பதிவுகளுக்கு (two blogs) எதிராக, டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் இன்று புகார் அளித்தார்.
“மூன்று இணைய செய்தித்தளங்களால் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரைகள் நெறிமுறையற்றவை” என்றார்.
மேலும் அவை பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்றும் அந்த இணையதளங்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் போலியானவை மற்றும் சரிபார்க்கப்படாதவை,” என்றும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“இஸ்மாயில் சப்ரி மிகக் குறுகிய கால பிரதமராக இருப்பதற்காகக் கவலைப்படுகிறார்; தன்னை ஆதரிக்குமாறு கெஞ்சுகிறார் ” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை நேற்று இணைய ஊடகத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.









