கோத்தா பாரு: பாசீர் மாஸ் அருகே சுங்கை கெளடி, கம்போங் அனோக் மச்சாங் என்ற இடத்தில் நேற்று இரவு தும்பாட்டில் இருந்து ஜோகூர் பாரு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினில் தீப்பிடித்தது.
இரவு 9.44 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் ரயிலில் இருந்த 180 பயணிகளுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று பாசீர் மாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உதவி கண்காணிப்பாளர் ஷபாவி செடபா தெரிவித்தார்.
பாசீர் மாஸ் மற்றும் தானா மேரா நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், நான்கு மணி நேரம் கழித்து அவர்கள் தீயை அணைத்ததாகவும் அவர் கூறினார்.
தீயணைப்பாளர்களுக்கு ரோங் செனோக்கில் இருந்து தன்னார்வ தீயணைப்புப் படைகள் மற்றும் டோக் உபான் காவல் நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் உதவினர் என்று அவர் இன்று பெர்னாமாவால் தொடர்பு கொண்டபோது கூறினார். பின்னர் ரயில் பாசீர் மாஸ் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக ஷபாவி கூறினார்.