புக்கிட் பெருந்தோங், பிப்ரவரி 18 :
இங்குள்ள ஜாலான் அடினியம் என்ற இடத்தில் நேற்று, மோட்டார் சைக்கிள் சறுக்கி சாலைப் பிரிவிலிருந்த மரத்தில் மோதியதில், 22 வயதான ஒரு பாதுகாவலர் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து இரவு 11 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அர்சாத் கமாருடின் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற யமஹா மோட்டார் சைக்கிள் தானாக சறுக்கி சாலையை பிரிக்கும் இடத்திலிருந்த மரத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
“இவ்விபத்து காரணமாக மோட்டார் வண்டி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கோலக் குபு பாரு மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அர்சாத் கூறினார்.
“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
“சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.














