தீப்பரவல் ஏற்பட்ட வீட்டின் வரவேற்பறையில், சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

கோத்தா கினபாலு, பிப்ரவரி 22 :

இங்குள்ள தம்புனான், கம்போங் திகோலோட் என்ற இடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், பெண் ஒருவரது சடலம் தனது வீட்டின் வரவேற்பறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் கிடக்க கண்டெடுக்கப்பட்டது.

நள்ளிரவு 12 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட நோர்ஹபிபா அவாங், 30, தீ விபத்து ஏற்பட்டிருந்த வேளையில், வீட்டின் அறையில் சிக்கியிருப்பதாகவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்கு போதுமான நேரம் இருக்கவில்லை என்றும் நம்பப்படுகிறது.

மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு (BBP) தலைவர் டெஸ்மண்ட் மிக்கி @ டொமினிக் கூறுகையில், இரண்டு அடுக்கு பலகை வீட்டை தீ முழுவதுமாக அழித்தபோது, பலியானவரின் உடல் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.

“தீயை அணைக்கும் நடவடிக்கையின் போது, ​​வீட்டின் அறையில் ஒரு சடலம் கிடப்பதைக் கண்டோம்.

“பாதிக்கப்பட்ட பெண்ணின் ஏனைய ஒன்பது குடும்ப உறுப்பினர்கள் எந்த காயமும் இன்றி தப்பினர்.

“தீயணைப்பு படை வருவதற்கு முன்பே, பாதிக்கப்பட்டவர் இல்லாததை மற்ற குடும்ப உறுப்பினர்கள் உணர்ந்தனர். இருப்பினும், அவரைக் காப்பாற்ற அவர்களுக்கு போதுமான நேரம் இருக்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.

நள்ளிரவு 12.25 மணியளவில், தீயணைப்பு வீரர்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் தீயணைப்பு நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு பணியாளர்கள் குழு உடனே விரைந்ததாகவும் அவர் கூறினார்.

“அதிகாலை 1.30 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது, மேலும் அதிகாலை 1.45 மணியளவில் தீயை அணைக்கும் பணி முழுமையாக முடிவடைந்தது,” என்று அவர் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை விசாரணையில் இருப்பதாகவும், உயிரிழந்தவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here