அமெரிக்க பெண் உடலுக்குள் உயிருடன் ஊடுருவிய 3 ஈக்கள்: இந்திய டாக்டர்கள் அகற்றி சாதனை

அமெரிக்காவை சேர்ந்த 32 வயது  பெண் சுற்றுலா பயணி ஒருவர்  இந்தியா வந்துள்ளார்.  அவருக்கு கடந்த ஒன்றரை மாதமாக வலது கண்ணில் இமை வீக்கம், சிவந்து போதல், அரிப்பு தன்மை காணப்பட்டது. இந்தியா வருவதற்கு முன், அமெரிக்காவில் மருத்துவர்களிடம் பரிசோதித்ததில், அவர்களால் எதனால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன என்று கண்டறிய முடியவில்லை. ஆனால் நோய் அறிகுறியின் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், இந்தியா வந்த பின்னும் அவருக்கு கண் இமைக்குள் அவ்வபோது ஏதோ அசைவது போன்ற உணர்வு ஏற்பட்டதால், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.
அப்போது, அவர் அமேசான் காடுகளுக்கு சென்று வந்த பின்பு, கடந்த 6 வாரங்களாகவே இந்த உணர்வு இருப்பதாக டாக்டர்களிடம் தெரிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கண்ணில் அரிதான மியாசிஸ் எனப்படும் மனிதர்கள், பிற பாலூட்டிகளில் பரவும் ஒட்டுண்ணி வகையை சேர்ந்த பெரிய அமெரிக்க ஈக்கள் இருப்பது உறுதியானது.
அவர் அமேசான் காடுகளுக்கு சென்று வந்த போது, இந்த ஈக்கள் உயிருடன் அவருடைய தோலை ஊடுருவி உள்ளே சென்றுள்ளன. இதையடுத்து, டாக்டர்கள்அவருக்கு எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் 10-15 நிமிடங்களில் அறுவை சிகிச்சை செய்து, வலது மேல் கண்ணிமை, கழுத்தின் பின்புறம் மற்றும் வலது முன்கை ஆகியவற்றிலிருந்து ஏறக்குறைய 2 செமீ நீளம் அளவுள்ள மூன்று ஈக்களை அகற்றினர்.
 இந்த ஈக்களை அகற்றாமல் விட்டால், நாளடைவில் திசுக்களில் கணிசமான அழிவை ஏற்படுத்தியிருக்கும். இதன் விளைவாக மூக்கு, முகத்தை சுற்றிய பகுதிகளில் அரிப்பு போன்றவை ஏற்படும். சில நேரங்களில் இது மூளைக்காய்ச்சல், மரணத்திற்கு வழிவகுக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here