இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்புக் கொரோனா தொற்றுக் காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் பெரும்பாலான பணக்காரர்கள் தங்களது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளனர்.
இந்தத் திடீர் வர்த்தக விரிவாக்கத்திற்கு ஒருபக்கம் சந்தையில் புதிதாகப் பல வர்த்தக வாய்ப்புகள் உருவாகியிருந்தாலும், இதேவேளையில் பெரும் பணக்காரர்களின் வாரிசுகள் வர்த்தகத்தைத் தனியாக நிர்வாகம் செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ள காரணத்தால் நாட்டின் முன்னணி பணக்காரர்கள் கடந்த 10 வருடத்தில் இல்லாதது போல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நாட்டின் முன்னணி பணக்காரர்களின் வாரிசுகள் தத்தம் நிறுவனத்தில் என்ன செய்கிறார்கள் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.


இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் பிரிவை முழுமையாக நிர்வாகம் செய்து வருகிறார். சமீபத்தில் ரிலையன்ஸ் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யக் கைப்பற்றப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் ஈஷா அம்பானி தலைமையில் தான் செய்யப்பட்டது.


முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இந்தியாவில் டிஜிட்டல் சேவை தரத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகப் பல துறையில் பல தொழில்நுட்பத்தில் இயங்கி வரும் நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார் ஆகாஷ் அம்பானி.


முகேஷ் அம்பானியின் கடைசிக் குட்டியான அனந்த் அம்பானி வர்த்தகச் சந்தைக்குப் புதியவர் என்பதால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிதாக உருவாக்கியிருக்கும் கிரீன் எனர்ஜி பிரிவின் தலைவராக உள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் இருக்கும் அனைத்து நிறுவனத்திலும் முகேஷ் அம்பானி நிர்வாக இயக்குனராக இருந்தாலும், அவரது பிள்ளைகள் அடுத்தடுத்த பதவிகளில் இருந்து மொத்த நிர்வாகத்தையும் கவனித்துக்கொள்கின்றனர்.


விப்ரோ நிறுவனத்தை மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக மாற்றிய அசிம் பிரேம்ஜி-யின் மகனான ரிஷாத் பிரேம்ஜி 2007ஆம் ஆண்டு விப்ரோ-வின் நிர்வாகத்திற்குள் வந்து தற்போது நிர்வாக இயக்குனராக உயர்ந்துள்ளார்.


இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான கௌதம் அதானியின் மூத்த மகனான கரண் அதானி, அதானி குழுமத்தின் கீழ் இருக்கும் முக்கியமான நிறுவனமான அதானி போர்ஸ் அண்ட் SEZ-ன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
கரண் அதானி தலைமையில் அதானி போர்ஸ் அண்ட் SEZ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வெறும் 2 துறைமுகம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 10 துறைமுகமாக உயர்ந்துள்ளது.


கௌதம் அதானியின் 2வது மகனான ஜீத் அதானி அதானி குழுமத்தில் 2019ல் பணியில் சேர்ந்தார். தற்போது அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த பைனான்ஸ் பிரிவின் தலைவராக உள்ளார். இதோடு அதானி ஏர்போர்ட்ஸ் மற்றும் அதானி டிஜிட்டல் லேப்ஸ் நிறுவனங்களையும் நிர்வாகம் செய்து வருகிறார்.


பார்தி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பார்தி மிட்டலின் மகன் கவின் பார்தி மிட்டல் ஆவார். கவின் குடும்பத் தொழிலில் சேரவில்லை. அவர் 2012 இல் ஹைக் என்ற இன்ஸ்டென்ட் மெசேஜ் செயலியை அறிமுகம் செய்தி வெற்றிக்கண்டார்.
இந்தியாவின் வேக்சின் கீங் என அழைக்கப்படும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவரான சைரஸ் பூனவல்லாவின் மகனான ஆதார் பூனவல்லா தற்போது இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.


குமார் மங்கலம் பிர்லாவின் மூத்த மகள் அனன்யா பிர்லா தனது தந்தையின் வர்த்தகச் சாம்ராஜ்யத்தில் சேர மறுத்துவிட்டார்.
அனன்யா பிர்லா தற்போது யுனிவர்சல் மியூசிக் நிறுவனத்தின் பாடகியாக உள்ளார். மேலும் கிராமப்புற பெண்களுக்கு வீட்டு வணிகத்திற்கான உபகரணங்களை வாங்குவதற்குச் சிறிய கடன்களை வழங்கும் ஸ்வதந்த்ரா மைக்ரோஃபினின் நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைவராக உள்ளார்.