இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை கல்வி மூலம் வலுப்படுத்தும் மித்ரா; நெகிரி செம்பிலானில் RM9.73 மில்லியன் மதிப்பிலான 13 திட்டங்கள் – ரவீந்திரன் நாயர்

சிரம்பான்,

  இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில் கல்வி, சமூக நலன், உயர்கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார அதிகாரமளிப்பை உள்ளடக்கிய பல்வேறு திட்டங்களை மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

       இந்தத் திட்டங்கள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நெகிரி செம்பிலானில் மட்டும் RM9.73 மில்லியன் மதிப்பிலான 13 திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதாகவும் மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலானில் செலிக் மடானி 2026 திட்டத்தின் கீழ் உதவி பெறும் புடாயாகு செரியா (Tadika Budayaku Ceria) பாலர் பள்ளியின் ஃபாரெஸ்ட் ஹெய்ட்ஸ் மற்றும் சிரம்பான் 2 கிளைகளுக்கு ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய சமூகத்தின் நிலையான வளர்ச்சிக்கு கல்வியே மிகப் பெரிய முதலீடு என்றும், அந்தக் கொள்கையையே மித்ரா தனது அனைத்து திட்டங்களிலும் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் கூறினார்.

டாக்டர் கந்தசாமி வேலாயுதன் நிர்வகித்து வரும் இந்த இரு கிளைகளிலும் மொத்தம் 88 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பாலர் பள்ளிக்காக RM217,350 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரவீந்திரன் நாயர் மேலும் கூறுகையில், குழந்தைகளின் ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் சமூக நலன் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் 13 திட்டங்கள் நெகிரி செம்பிலானில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

அவற்றில் முக்கியமான செலிக் மடானி திட்டம், இந்திய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பொருளாதாரக் காரணங்களால் ஆரம்பக் கல்வியில் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நாடு முழுவதும் 162 பாலர் பள்ளிகளில் கல்வி பயிலும் 3,612 குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இதற்காக RM8.87 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் அதிகபட்சமாக RM150 கல்விக் கட்டண உதவியும், RM80 காலை உணவு உதவியும் வழங்கப்படுவதால், மொத்தம் RM230 வரை நிதியுதவி கிடைக்கிறது. இந்த உதவி ஒரு கல்வி ஆண்டில் 11 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக RM2,530 வரை மித்ரா நிதியுதவி வழங்குகிறது.

பள்ளிகளின் கல்விக் கட்டண அமைப்பு மாறுபடுவதால், RM150-க்கும் குறைவான கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் முழுக் கட்டணத்தையும் மித்ரா ஏற்றுக்கொள்கிறது. RM150-ஐ விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில், கூடுதல் தொகையை பெற்றோர்களே செலுத்த வேண்டும். இருப்பினும், RM80 காலை உணவு உதவி அனைத்து பயனாளி மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

மாநில வாரியாகப் பார்க்கையில், சிலாங்கூரில் 46, பேராக்கில் 34, கெடாவில் 24 மற்றும் நெகிரி செம்பிலானில் 22 பாலர் பள்ளிகள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. நெகிரி செம்பிலானில் மட்டும் 442 குழந்தைகள் பயனடைந்து வருவதுடன், அதற்காக RM1,072,515.60 ஒதுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் கல்விப் பயணம் ஆரம்பக் கல்வியுடன் நிறைவடையாமல், தமிழ்ப்பள்ளி, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வரை தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில் மித்ராவின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மடானி தளவாடப் பொருளுதவித் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் 46 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 4,288 மாணவர்களும் 632 ஆசிரியர்களும் பயனடைந்துள்ளனர். இதற்காக RM1,638,035 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி மடானி திட்டத்தின் மூலம் 34 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1,039 மாணவர்களுக்கு மலாய் மொழி, ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் இலவச சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக RM798,518 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கான தீவிர கல்விப் பயிற்சித் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், சுமார் 200 மாணவர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக RM791,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளில் நவீன கற்றல் சூழலை மேம்படுத்தும் வகையில் 45 தமிழ்ப்பள்ளிகளுக்கு விவேகப் பலகைகள் (ஸ்மார்ட் போர்டுகள்) வழங்கப்பட்டுள்ளன. இதற்காக RM562,500 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 3,000 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. நெகிரி செம்பிலானில் மட்டும் 245 மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இதற்காக RM649,659 ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உயர்கல்வி ஆரம்ப நிதியுதவித் திட்டத்தின் கீழ் 395 மாணவர்கள் தலா RM2,000 தொடக்க நிதியுதவி பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவருக்கு RM3,000 சிறப்பு உதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த ஒதுக்கீடு RM791,000 ஆகும்.

தர்மா மடானி திட்டத்தின் கீழ் நெகிரி செம்பிலானில் உள்ள 74 இந்து ஆலயங்களுக்கு RM1.48 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) உதவித் திட்டம், தோட்டத் தொழிலாளர் சமூக மேம்பாட்டுத் திட்டம், மலேசிய இந்திய உருமாற்ற வேளாண்மைத் திட்டம் (MITAP) மற்றும் மலேசிய இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (MICEP) ஆகிய திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மலேசிய இந்திய உருமாற்ற வேளாண்மைத் திட்டத்தின் கீழ் 8 பேர் பயனடைந்துள்ளதுடன், இதற்காக RM209,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மலேசிய இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 38 பேர் பயனடைந்துள்ளதுடன், RM755,033 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், அவசரகாலங்களில் இந்திய சமூகத்தினருக்கு உடனடி உதவி வழங்கும் துணை மடானி திட்டத்தின் கீழ் இதுவரை 332 பேர் பயனடைந்துள்ளனர். மருத்துவ உதவி, இயற்கைப் பேரிடர், வீட்டுப் பழுதுபார்ப்பு, வாழ்வாதார உதவி மற்றும் இறுதிச் சடங்கு உள்ளிட்ட பல்வேறு மனிதாபிமான தேவைகளுக்காக RM478,000 நிதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் நெகிரி செம்பிலானுக்கானவை மட்டுமே என்றும், இதேபோன்று மற்ற மாநிலங்களிலும் மித்ரா செயல்படுத்தி வரும் திட்டங்கள், பயனாளிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விரிவான தகவல்கள் கட்டம் கட்டமாக வெளியிடப்படும் என்றும் ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.

முடிவில் அவர் கூறுகையில், “இந்திய சமூகத்தின் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை நிலையான முறையில் உயர்த்துவதே மித்ராவின் முக்கிய நோக்கமாகும். இதற்காக பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here