கஞ்சா விற்பனையாளர்கள் என நம்பப்படும் இருவர் கைது; RM60,000 மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 24 :

இங்குள்ள டாமான்சாரா மற்றும் கோலாலம்பூரில் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் RM60,000 மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என நம்பப்படும் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமீட் கூறுகையில், முதல் சம்பவத்தில் டாமான்சாராவில் உள்ள சூப்பர் மார்க்கெட் பார்க்கிங்கில் மாலை 6.30 மணியளவில் புரோத்தோன் சத்ரியா காரில் வந்த 34 வயது முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

“காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் விளைவாக, RM53,493 மதிப்புடையதாக மதிப்பிடப்பட்ட 16.21 கிலோகிராம் எடையுள்ள 17 பதப்படுத்தப்பட்ட கஞ்சா கட்டிகள் கொண்ட ஒரு பெட்டியை போலீசார் கண்டுபிடித்தனர்,” என்று அவர் கூறினார்.

அந்த நபரின் தகவலின் அடிப்படையில், தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள ஒரு வீட்டை போலீசார் சோதனை செய்து, அங்கு 44 வயதுடைய இரண்டாவது சந்தேக நபரை கைது செய்தனர்.

“வீட்டின் முதல் அறையில் சோதனை செய்ததில், அலமாரியில் ஒரு பையில் RM9,636 மதிப்புள்ள 2.92 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா என நம்பப்படும் மூன்று பதப்படுத்தப்பட்ட கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் தற்போது ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here