ஜோகூர் பாரு, மார்ச் 6 :
கடந்த வியாழக்கிழமை, இங்கு லார்கினிலுள்ள ஒரு தொலைபேசிக் கடையில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், கடைக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM1 மில்லியன் மதிப்பிலான பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமத் கூறுகையில், நான்கு அறைகள் கொண்ட இந்த கடையில், சுமார் 43,295 போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்துவதற்கு போதுமான, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காக பயன்படுத்தப்பட்டது என்றார்.
சோதனையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 1.7 கிலோகிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், 1.35 கிலோகிராம் கெட்டமைன் மற்றும் ஏழு கிலோகிராம் எரிமின் 5 மாத்திரைகள் என்பன அடங்கும். போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு RM746,890 என்று அவர் கூறினார்.
இதில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 31 மற்றும் 34 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணைகளில் மொபைல் போன் கடை போதை மருந்துக் கடையாகப் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர்களிடமிருந்து “இரண்டு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள், RM37,900 ரொக்கம் மற்றும் RM16,340 மதிப்புள்ள சிங்கப்பூர் கரன்சி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் இன்று ஜோகூர் காவல் படைத் தலைமையகத்தில் (IPK) நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களின் கடந்த கால பதிவுகளை மறுஆய்வு செய்ததில், இரண்டு சந்தேக நபர்களுக்கும் போதைப்பொருள் தொடர்பான முந்தைய பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கமாருல் ஜமான் கூறினார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் குழுவின் உறுப்பினர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
“ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி விசாரணைக்கு உதவும் வகையில், சந்தேக நபர்கள் மார்ச் 9ஆம் தேதி வரை ஆறு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.