கோலாலம்பூர், மார்ச் 7 :
பொதுமக்கள், குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் சாலையைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக வாகனம் ஓட்டவும், தற்போது திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்கவும் முயற்சிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவுறுத்தினார்.
தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் மற்றும் டூவிட்டர் கணக்குகளில் அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில், “கனமழையைத் தொடர்ந்து நகரின் 6 பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் மலேசியக் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் முகவர் நிலையங்கள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளன. மழையின் போது கவனமாக வாகனத்தை ஓட்டவும், முடிந்தால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை தவிர்க்கவும்,” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் பல படங்களையும் பிரதமர் பதிவேற்றினார்.
முன்னதாக, மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது முகநூல் பதிவில், நகரின் மையத்திலிருந்து சாலாக் செலாத்தான் வரையிலான பெஸ்ராயா விரைவுச்சாலை, குச்சாய் முதல் சாலாக் ஜெயா வரை மற்றும் கம்போங் மலேசியாவிலிருந்து குச்சாய் வரையிலான பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும் கேசாஸ் விரைவுச்சாலையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அவான் பெசார் மேற்கு நோக்கிச் செல்லும் சுங்கச்சாவடியில் நான்கு வழிச்சாலையும் மூடப்பட்டது மற்றும் சுக்கோம் இன்டர்சேஞ்ச் செல்லும் KM48.3 இல் ஒரே ஒரு பாதையை மட்டுமே போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியும் என்றது.
அத்தோடு கோலாலம்பூரின் SMART சுரங்கப்பாதையும் வெள்ளநீரை வெளியேற்றுவதற்காக தற்காலிகமாக போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.