இரு கார்களை உட்படுத்திய சாலை விபத்தில் மைவி கார் ஓட்டுநர் மரணம்!

உலு சிலாங்கூர், மார்ச் 14 :

இன்று காலை 9 மணியளவில், இங்குள்ள ஜாலான் சுங்கை சோ – புக்கிட் புருந்தோங்கின் 8 ஆவது கிலோமீட்டரில் இரு கார்களை உட்படுத்திய சாலை விபத்தில், பலத்த காயங்களால் பாதிக்கப்பட்ட 22 வயது ஆடவர் உயிரிழந்தார்.

உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் அர்சாத் கமாருடின் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளைஞன் பெரோடுவா மைவியை ஓட்டிக்கொண்டு புக்கிட் செந்தோசா நகருக்குச் சென்றுகொண்டிருந்தபோது, இந்த விபத்து நேர்ந்தது.

பாதிக்கப்பட்டவர் கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் பாதையில் 61 மற்றும் 60 வயதுடைய தம்பதியினர் ஓட்டிச் சென்ற பெரோடுவா கெலிசா கார் மீது மோதியதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

“விபத்தின் விளைவாக, அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோலாக் குபு பாரு மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

“இதற்கிடையில், பெரோடுவா கெலிசா காரின் 61 வயதான ஆண் ஓட்டுநர் சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்களை அடுத்த நடவடிக்கைக்காக காவல்துறைக்கு தெரிவிக்குமாறு அர்சாத் கேட்டுக் கொண்டார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987ன் பிரிவு 41 (1) இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here