“BN தலைவர் சம்சூரி எங்கே போனார்?” – மாநிலத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில் பாஸ்-பெர்சத்து இடையே வெடித்தது பகிரங்க மோதல்!

கோலாலம்பூர்:

லேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் பிளவு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாஸ் (PAS) கட்சி, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியை விட்டு எவ்வளவு சீக்கிரம் வெளியேறுகிறதோ, அவ்வளவு நல்லது என்று பெர்சத்து (Bersatu) கட்சியின் மூத்த தலைவர்கள் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெர்சத்து கட்சியுடன் தங்களின் கூட்டணித் தொடருமா என்பது குறித்து பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாதி அவாங் இன்று இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், பெர்சத்து தலைவர்களிடமிருந்து இந்த அதிரடி எதிர்வினை வந்துள்ளது.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத பெர்சத்து கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் கூறுகையில், பாஸ் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறித் தனித்துப் போட்டியிடும் அல்லது அம்னோவுடன் இணைந்து ‘முவாஃபாகாட் நேஷனல் 2.0’ (MN 2.0) திட்டத்திற்குப் புத்துயிர் கொடுக்கும் என்பதைத் தங்களது கட்சி நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

“கூட்டணியில் எந்தவொரு ஆலோசனையும் நடத்தாமல், பாஸ் கட்சி தொடர்ந்து அம்னோவுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி பிஎன் கூட்டணிக்குப் பலமுறை துரோகம் இழைத்துள்ளது. இதை பெர்சத்துவின் அடிமட்டத் தொண்டர்களும் உணர்ந்துள்ளனர். எனவே, அவர்கள் கூட்டணியை விட்டு எவ்வளவு சீக்கிரம் விலகுகிறார்களோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கு எங்களால் மற்ற கட்சிகளுடன் சுமுகமாகத் தொகுதிப் பங்கீடு செய்ய முடியும்,” என்று அவர் சாடினார்.

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பாஸ் கட்சியின் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தாரின் தலைமையின் கீழ் கூட்டணி முற்றிலும் முடங்கிப் போய்விட்டதாகப் பெர்சத்து தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டுத் தேர்தல் காய்ச்சல் தொடங்கியுள்ள நிலையிலும், பிஎன் தலைவர் சம்சூரி இதுவரை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்தோ அல்லது தொகுதிப் பங்கீடு குறித்தோ பேசுவதற்கு உயர் மட்டக் குழு கூட்டத்தைக் கூடக் கூட்டவில்லை என்று அவர் சாடினார். சம்சூரி தன்னிச்சையாகச் செயல்பட முடியாமல், ஹாதி அவாங் மற்றும் பாஸ் ஸ்யூரா (Syura) கவுன்சிலின் அனுமதிக்காகக் காத்திருப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்தக் கடுமையான விமரிசனங்கள் குறித்துப் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராகிம் துவான் மேனிடம் கேட்டபோது, “இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் உண்மையற்றவை என்பதால், நான் இதற்குப் பதிலளிக்கத் தேவையில்லை,” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இதற்கிடையே, பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹைதீன் யாசின் நேற்று பேசுகையில், பாஸ் கட்சியுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கூட்டணியை வலுப்படுத்துவதற்கும் பாஸ் கட்சியுடன் நல்லுறவைப் பேணவும் தங்களது கட்சி இன்னும் தயாராகவே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பாஸ் கட்சியின் பொதுச்செயலாளரிடமிருந்து இதற்கான கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே கடந்த மே மாத இறுதியில், பெர்சத்து கட்சியின் சில செயல்பாடுகள் “அசௌகரியமாக” இருப்பதாகக் கூறி கூட்டணியை மறுபரிசீலனை செய்யப் போவதாக ஹாதி அவாங் எச்சரித்திருந்தார். தற்போது இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதல் வெட்டவெளிச்சமாகியுள்ளதால், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here