குவாந்தான், மார்ச் 28 :
கவர்ச்சிகரமான பங்கு முதலீடு விளம்பரம் மூலம், பல சலுகைகள் கிடைக்கும் என நம்பவைத்து ஏமாற்றப்பட்ட ஓய்வு பெற்றவர் RM84,776.65 இழந்தார்.
பகாங் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJK) தலைமைக் கண்காணிப்பாளர் முகமட் வாசிர் முகமட் யூசோப் கூறுகையில், ஜனவரி 22 அன்று, பாதிக்கப்பட்டவர் முகநூலில் உலாவும்போது, பங்கு முதலீட்டை வழங்கும் விளம்பரத்தைக் கண்டறிந்தார்.
அவரது கூற்றுப்படி, ஜெராண்டுட்டைச் சேர்ந்த 62 வயதான பாதிக்கப்பட்ட பெண்மணி முதலீடு செய்வதில் மிக ஆர்வமாக இருந்தார் மற்றும் முதலீடு செய்வதில் ஆர்வத்தை வெளிப்படுத்த, சந்தேக நபரை WhatsApp மூலம் தொடர்பு கொண்டார்.
பாதிக்கப்பட்டவர் RM1,500 பதிவுத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும், மூன்று நாட்களுக்குள் RM83,400 ஆகத் திருப்பித் தருவதாகவும், முதலீட்டுக்காக ஒரு இணைப்பு (link) அவருக்கு கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களுக்குள், பாதிக்கப்பட்டவர் 13 பரிவர்த்தனைகள் மூலமாக மொத்தம் RM84,776.65 ஐ ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து , பங்கு முதலீட்டில் இருந்து லாபத்தைப் பெறுவதற்கான செயலாக்கக் கட்டணம் உட்பட பல்வேறு கொடுப்பனவுகளுக்குச் செய்தார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்திய பின்னரும் பாதிக்கப்பட்டவருக்கு உறுதியளிக்கப்பட்ட தொகை இன்று வரை கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், நேற்று ஜெராண்டுட் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) புகார் அளித்ததாக முகமட் வாசிர் கூறினார்.
மற்றொரு வழக்கில், முதலீட்டு சலுகையால் ஏமாற்றப்பட்ட ஃபெல்டா பாதுகாப்பு காவலர் RM3,500 இழந்தார்.
முகமட் வாசிரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் டெலிகிராமில் சந்தேக நபரைத் தொடர்பு கொண்டார் மற்றும் RM500 பேக்கேஜ் சலுகை முதலீட்டில் ஆர்வமாக இருந்தார், இது 6 மணி நேரத்திற்குள் RM7,000 லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது என அவருக்கு கூறப்பட்டது.
“பாதிக்கப்பட்டவர் 3 பரிவர்த்தனைகள் மூலம் RM3,500 செலுத்தினார், மேலும் சந்தேக நபர் குறிப்பிட்டது போல எந்த இலாபத் தொகையும் கிடைக்காததால் அவர் ஏமாற்றப்பட்டதாக சந்தேகிக்கத் தொடங்கினார்,” என்று அவர் கூறினார்.
இரண்டு வழக்குகளும் குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது. இது குற்றம் நிரூபிக்கப்படடால் ஒரு வருடத்திற்கு குறையாத மற்றும் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.