163 கிலோ கஞ்சாவுடன் 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது!

ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 1 :

கடந்த புதன்கிழமை பினாங்கு மற்றும் கெடாவைச் சுற்றி நடத்தப்பட்ட ஒன்பது தனித்தனி சோதனைகள் மூலம் RM409,125 மதிப்புள்ள 163.65 கிலோகிராம் எடையுள்ள கஞ்சாவை வைத்திருந்த மற்றும் விநியோகம் செய்த, ஒரு கும்பலின் நடவடிக்கைகளை போலீசார் கண்டுபிடித்ததுடன் 9 பேரையும் கைது செய்தனர்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையுடன் இணைந்து பினாங்கு கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகத்தின் (IPK) போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை (JSJN) நடத்திய சோதனையில், இந்தச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஏழு உள்ளூர் ஆண்களையும் இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.

பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் கூறுகையில், நண்பகல் 12.30 முதல் 2.10 மணி வரை பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் எட்டு பினாங்கிலும், ஒன்று கெடாவில் உள்ள சுங்கை பட்டாணியிலும் மேற்கொள்ளப்பட்டன.

லெபுஹ் சுங்கை பினாங்கில் உள்ள 25 வயது முடிதிருத்தும் ஒருவரின் கடையில் நடத்தப்பட்ட சோதனையில், 153.7 கிலோ எடையுள்ள 153 பதப்படுத்தப்பட்ட கஞ்சா கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

“கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உள்ளூர் சந்தைக்கு இக்கும்பல் தீவிர போதைப்பொருள் விநியோக நடவடிக்கையை மேற்கொண்டதாக உளவுத்துறை கண்டறிந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து “25 முதல் 55 வயதுடைய அனைத்து சந்தேக நபர்களும் வங்கி எழுத்தர்களாகவும், மெக்கானிக்களாகவும், ஓய்வு பெற்றவர்கள், முடிதிருத்தும் தொழிலாளிகளாகவும், வியாபாரிகள் மற்றும் வேலையில்லாதவர்களாகவும் பணிபுரிகின்றனர்” என்று பினாங்கு காவல் படைத் தலைமையகத்தில் (IPK) இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த முகமட் ஷுஹைலி, சந்தேகத்திற்குரியவர்கள் அனைவரிடமும் சிறுநீர் பரிசோதனை செய்ததில் அவர்களில் நால்வருக்கு டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (THC) சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது, மற்ற ஐந்து பேர் எதிர்மறையான பதிலைப் பெற்றனர்.

“சந்தேக நபர்களில் நான்கு பேருக்கு குற்றம் மற்றும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட கடந்தகால பதிவுகளை இருப்பதும் சோதனையில் கண்டறியப்பட்டது.

“அவர்களில் நான்கு பேர் ஏப்ரல் 6 வரை ஏழு நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டனர், மேலும் ஐந்து பேர் விசாரணையில் உதவுவதற்காக நாளை (ஏப்ரல் 2) வரை மூன்று நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து எட்டு வாகனங்கள், நகைகள், மூன்று கைக்கடிகாரங்கள் மற்றும் மொத்தம் RM234,550 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

போதைப்பொருள் மற்றும் சொத்து பறிமுதல்களின் மொத்த மதிப்பு RM643, 675 ஆகும்.

“பிடிக்கப்பட்ட மொத்த போதைப்பொருளை 327,400 போதைபித்தர்கள் பயன்படுத்த போதுமானது,” என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here