ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்

ஜெனீவா, ஏப்ரல் 8 :

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டு படையினர் உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதி மற்றும் புச்சா நகரில் அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்ததற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐ.நா.பொதுச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானத்திற்கு ஆதரவாக 93 நாடுகள் வாக்களித்தன. 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்தியா உள்பட 58 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

இதையடுத்து ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடை நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேறியது. இது சட்டவிரோதம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் துணை தூதர் ஜெனடி குஸ்மின், இது சட்டவிரோதமான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று தெரிவித்தார். ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா முழுவதுமாக வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யும் முடிவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக உக்ரைன் கூறியுள்ளது. மனித உரிமைகளை பாதுகாக்கும் ஐநா அமைப்புகளில் போர்க் குற்றவாளிகளுக்கு இடமில்லை என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here