வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மரணம், மகன் தீக்காயங்களுடன் மீட்பு

குவாந்தான், ஏப்ரல் 9 :

இங்குள்ள ஜாலான் சுங்கை லெம்பிங்கில் உள்ள கம்போங் பாடாங் பெர்டானாவில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மரணம், மகன் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்.

பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு துணை இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கானி கூறுகையில், இந்த சம்பவம் இரவு 11 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது என்றார்.

இரவு 11.08 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து இந்தேரா மஹ்கோத்தா மற்றும் குவாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து, மொத்தம் 24 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீயை அணைக்கும் பணியில் இரண்டு எஃப்ஆர்டி இயந்திரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டி இயந்திரம் என மூன்று இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்றார்.

“இந்த தீ விபத்தில், தரை வீடு கிட்டத்தட்ட 50 விழுக்காடு எரிந்து நாசமானது.

“இந்த சம்பவத்தில், ஒரு வயது வந்த ஆண் இறந்ததை மலேசிய சுகாதார அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் உறுதிப்படுத்தினர் , அதே நேரத்தில் ஒரு சிறுவனின் கையில் தீக்காயம் ஏற்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தீயணைப்பு படையினர் தீயை அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தியதாகவும், இரவு 11.57 மணியளவில் நடவடிக்கை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here