சிங்கப்பூர், ஏப்ரல் 9 :
துவாஸ் சோதனைச் சாவடியில் உள்ள குடிநுழைவு அனுமதிக் கூடத்தில் நிறுத்தத் தவறியதற்காக, இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் சிங்கப்பூரின் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) கைது செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 2.14 மணியளவில், சிங்கப்பூரர் ஒருவர் ஓட்டிச் சென்ற மலேசியப் பதிவு எண் கொண்ட வாகனம், சுல்தான் அபுபக்கர் வளாகத்தில் (KSAB) மலேசியாவிலிருந்து புறப்படும் மண்டபத்தில் சோதனையைத் தவிர்த்துவிட்டு, சிங்கப்பூர் ICA நோக்கி வேகமாகச் சென்ற போது, மலேசியப் போக்குவரத்துக் காவல்துறையினரால் துரத்தப்பட்டது.
“மலேசியா நோக்கிச் செல்லும் துவாஸ் சோதனைச் சாவடியின் நுழைவாயிலில் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே “அலாரம் இயக்கப்பட்டதும் சோதனைச் சாவடி உடனடியாக மூடப்பட்டது” என்று ICA அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் தானியங்கி மோட்டார் சைக்கிள் அனுமதி பாதை வழியாக தப்பிக்க முயன்றார், ஆனால் அவரது வாகனம் கவுண்டரில் மோதியதால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.
மேலும் ICA அதிகாரிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர் மற்றும் ஓட்டுநர் சட்ட அமலாக்கத்தால் கைது செய்யப்பட்டார்.
அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகனத்தில் பயணித்த இருவர்; ஒரு சீன நாட்டு ஆண் மற்றையவர் ஒரு வியட்நாமிய பெண்ணும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றனர், ஆனால் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
“வியட்நாம் நாட்டுப் பெண் தப்பிக்க முயன்றபோது காயமடைந்தார். அவர்கள் இருவரிடமும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லை” என்று ஐசிஏ தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அந்த ஓட்டுநர் காவல்துறை மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் (CNB) தேடப்பட்டு வருபவர் என்றும், தவறான சிங்கப்பூர் ஆவணங்களை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
அத்தோடு முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் ஓட்டுநருக்கு போதைப்பொருள் இருப்பது உறுதியானது, அவர்கள் அனைவரும் இப்போது சிங்கப்பூர் காவல்துறையின் தடுப்புக் காவலில் உள்ளனர், விசாரணை இன்னும் தொடர்கிறது.









