காதலியைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்த வாலிபருக்கு 32 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்!

கோலாலம்பூர்:

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலியைத் தலையணையால் முகத்தை அமுக்கிக் கொலை செய்த 23 வயது முன்னாள் மெக்கானிக் ஒருவருக்குக் கிள்ளான் உயர் நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் (Rotan) விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட அமிருல் அமீன் அமிருதீன் (வயது 23) மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததைத் தொடர்ந்து, நீதிபதி நோர்லிசா ஒஸ்மான் இந்த அதிரடித் தண்டனையை வழங்கினார். இந்தச் சிறைத்தண்டனை அவர் கைது செய்யப்பட்ட தேதியான ஆகஸ்ட் 24, 2022 முதல் தொடங்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி மாலை 7:18 மணியளவில், கிள்ளான், கம்போங் ஸ்ரீ பண்டானில் உள்ள ஒரு வீட்டில் நூர் ஷகிரா அப்துல்லா (வயது 24) என்ற பெண்ணைக் கொலை செய்ததாக அமிருல் அமீன் மீது தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் கீழ் (கொலைக்குற்றம்) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அமிருல் தன்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நூர் ஷகிரா வற்புறுத்தியுள்ளார். அதற்கு அமிருல் மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பெண் தலையணையால் முகம் அமுக்கப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது நீதிபதி நோர்லிசா கூறுகையில்: “குற்றம் சாட்டப்பட்டவர் தனது காதலியின் முகத்தைத் தலையணையால் அமுக்கியபோது, அந்தப் பெண் மூச்சு விட முடியாமல் திணறியதையும், தவித்ததையும் தான் பார்த்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். பெண்ணின் ஆக்ரோஷமான நடத்தையை நிறுத்தவே தான் அப்படிச் செய்ததாக அவர் வாதாடினார்.”

“மனிதர்கள் மூக்கு வழியாக மட்டுமே சுவாசிக்க முடியும் என்பதால், தலையணையால் முகத்தை முழுமையாக மூடினால் மூச்சுத்திணறல் ஏற்படும் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. அந்தப் பெண் தன் போராட்டத்தை நிறுத்தி, மூச்சடங்கிய பிறகே அவர் தலையணையை எடுத்துள்ளார். பெண்ணை அமைதிப்படுத்த வேறு வழிகள் இருந்தும் அவர் இந்தத் கொடூரச் செயலைச் செய்துள்ளார்,” என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் 17 அன்று, தண்டனைச் சட்டம் பிரிவு 304(b)-இன் கீழ் (கொலை நோக்கம் இல்லாத மரணம் விளைவித்தல்) அமிருலுக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்தத் தண்டனைக் குறைப்புக்கு எதிராக அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதனை ஏற்றுக்கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், கிள்ளான் உயர் நீதிமன்றத்தில் பிரிவு 302-இன் (கொலைக்குற்றம்) கீழ் வழக்கைத் தற்காத்து வாதாடுமாறு உத்தரவிட்டது. அதன் இறுதி விசாரணையிலேயே தற்போது இந்த 32 ஆண்டுகள் சிறையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here