கோலாலம்பூர்:
மலேசியக் கல்வி அமைச்சின் (MOE) கீழ் உள்ள 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 2026-ஆம் ஆண்டிற்கான ‘மாடானி புத்தக வவுச்சர்’ (MADANI Book Voucher) திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளனர். இதற்கென அரசாங்கம் RM221.6 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
நாளை (ஜூலை 2) காலை 10:00 மணி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை, தகுதியுள்ள மாணவர்கள் தங்களின் RM100 மின்-வவுச்சரை (e-voucher) மீட்டெடுத்துக் கொள்ளலாம் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ (Wong Kah Woh) நாடாளுமன்ற மக்கள் அவையில் இதனைத் தெரிவித்தார். இடைநிலைப்பள்ளித் தொடக்க வகுப்பு (Remove Class) முதல் படிவம் ஆறு (Form Six) வரையிலான மாணவர்கள், தொழில்நெறி கல்லூரிகள் (Vocational Colleges), மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் மற்றும் மலேசிய ஆசிரியர் கல்விக்கழக (IPGM) மாணவர்கள் உட்பட மொத்தம் 2,217,579 பேர் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறவுள்ளனர்.
இந்த புத்தக வவுச்சர்கள் அனைத்தும் ‘புக் கேபிட்டல்’ (BookCapital) இயங்கலைத் தளம் வழியாகவே மீட்டெடுக்கப்பட வேண்டும். இந்த தளத்தில் தற்போது 1,238 புத்தக விற்பனையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இணையம் வழியாகப் புத்தகங்களை வாங்கி, வீட்டு வாசலுக்கே விநியோகம் செய்யும் இந்த முறையினால், கிராமப்புறங்கள் மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் வாழும் மாணவர்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதி மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு இத்திட்டத்தில் ஒரு புதிய மேம்பாடு புகுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ‘மாடானி சிறப்புத் தலைப்புப் பிரிவு’ (MADANI Special Title Focus) என்ற புதிய வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் இலக்கியங்கள், தத்துவங்கள், வரலாறு, பொருளாதாரம், புவிசார் அரசியல் மற்றும் மனித மூலதன மேம்பாடு சார்ந்த புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், எதிர்காலத் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம், STEM மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் சார்ந்த புத்தகங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
வவுச்சரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு மாணவரும், இந்த ‘மாடானி சிறப்புப் பிரிவு’ பட்டியலிலிருந்து குறைந்தது ஒரு புத்தகத்தையாவது கட்டாயம் வாங்க வேண்டும்.
கடந்த 2024-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில், 97.5 சதவீதப் பெற்றோர்களும் மாணவர்களும் இந்த வவுச்சர் தங்களுக்கு, குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குப் பெரிதும் உதவியதாகத் தெரிவித்துள்ளனர்.
“டிஜிட்டல் முறையில் இது செயல்படுத்தப்படுவதால் 100% வவுச்சர்களும் மாணவர்களைச் சென்றடைந்துள்ளன. இதில் எந்தவொரு முறைகேடோ அல்லது கசிவோ ஏற்படவில்லை; முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ பெருமிதத்துடன் கூறினார்.




















