குடிக்க தண்ணீர் கூட இல்லை- அரசு கட்டுப்பாடுகளால் மிரண்டு நிற்கும் பொதுமக்கள்

பெய்ஜிங்: சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஷாங்காய் நகரில் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் பரவிய கொரோனா பெருந்தொற்று உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கிய ஆஸ்திரேலியா வரை எந்தவொரு உலக நாடும் கொரோனா வைரசில் இருந்து தப்பவில்லை.

கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் பரவிய கொரோனா பெருந்தொற்று உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கிய ஆஸ்திரேலியா வரை எந்தவொரு உலக நாடும் கொரோனா வைரசில் இருந்து தப்பவில்லை.

கொரோனா வைரஸ்

கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடுகையில் சீனாவில் வெகு விரைவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. வைரஸ் பாதிப்பும் உயிரிழப்பும் கூட சீனாவில் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படியே தலைகீழ். உலகின் பெரும்பாலான நாடுகளில் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சீனாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஷாங்காய்

உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா உடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறி வரும் நிலையில், சீனா மட்டும் இன்னும் ஜீரோ கோவிட் கொள்கையில் உறுதியாக உள்ளது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 2.6 கோடி மக்கள்தொகையைக் கொண்ட சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஷாங்காயில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வீடியோ

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு மற்றும் மருத்துவ உதவிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். பால்கனியில் இருந்தபடியே தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சூப்பர் மார்க்கெட்

இருப்பினும், சீன அரசு இந்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதாகத் தெரியவில்லை. கொரோனா பெருந்தொற்று மிக மோசமானது என்பதால் பொதுமக்கள் சுதந்திரத்திற்கான தங்கள் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகிறது. அதேபோல கடுமையான கட்டுப்பாடுகளை மீறி, ஷாங்காய் நகரின் சில பகுதிகளில் கலவரம் வெடித்தது. சூப்பர் மார்க்கெட் ஒன்றைப் பொதுமக்கள் சூறையாடும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

திரண்டு வரும் மக்கள்

இதேபோல ஷாங்காய் நகரில் பல பகுதிகளில் மக்கள் அரசுக்கு எதிராகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஒற்றை கட்சி ஆட்சி செய்யும் சீனாவில் பொதுவாக மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள். ஆனால், இப்போது அவர்களே அரசுக்கு எதிராக ஊரடங்கை மீறி போராட்டத்தில் இறங்கி உள்ளது, நிலைமையின் தீவிர தன்மை உணர்த்துவதாக உள்ளது.

பேய் நகரம்

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஷாங்காய் நகரில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து மக்களும் வீடுகளிலேயே முடங்கி உள்ளதால், ஷாங்காய் நகரமே பேய் நகரம் போல காட்சி அளிக்கிறது. ஷாங்காயில் நிலைமையைக் கண்காணிக்க ஆயிரம் ராணுவ மருத்துவர்கள், 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல ஷாங்காய் நகரில் உள்ள 2.6 கோடி பேருக்கும் கொரோனா டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது. அதில் வைரஸ் கண்டறியப்பட்ட நபர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஓமிக்ரான் கொரோனா

ஷாங்காய் நகரில் நேற்று மட்டும் 25,000 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் கண்டறியப்பட்ட தினசரி கொரோனா பாதிப்புகளில் இது தான் அதிகம். ஓமிக்ரான் கொரோனா காரணமாகவே அங்கு வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளிலும் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், அந்நகரின் மருத்துவ கட்டமைப்பிலும் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here