அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது – பிரதமர்

கோலாலம்பூர், ஏப்ரல் 16 :

அல்-அக்ஸா மசூதியில் வெள்ளிக்கிழமையன்று பாலஸ்தீன பொதுமக்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் மீது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் நடத்திய தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றின் மீதான தாக்குதல், பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகள், உயிர்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் கண்ணியத்திற்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் பின்பற்றப்படும் தாக்குதல்கள் மற்றும் நிறவெறிக் கொள்கையின் தொடர்ச்சியை பிரதிபலிக்கிறது என்றார்.

“ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் வன்முறைகள் அதிகரித்து வருவதால் மலேசியா மிகவும் கவலை கொண்டுள்ளது.

“இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு நிரந்தர தீர்வை நோக்கிய சர்வதேச சமூகம் அதன் உறுதிப்பாட்டை புதுப்பிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

பாலஸ்தீனியர்களுக்கு அமைதி மற்றும் நீதி கிடைக்கவும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த அமைதியை பெறவும் மலேசியா சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

வெள்ளிக்கிழமை விடியற்காலை தொழுகைக்குப் பிறகு மசூதி மைதானத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here