இஸ்ரேலுக்கு எதிரான போரால் கடும் துயரத்தில் வாடும் காஸா மக்களுக்கு, அத்தியாவசிய பொருள்களை வழங்கும் நோக்கில் சிங்கப்பூர் அரசு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.
சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சகம் தெரிவித்ததாவது, ஆகஸ்ட் 12 முதல் 25 வரை, சிங்கப்பூர் ஆகாயப்படை விமானம் மூலம் சுமார் 15 டன் அத்தியாவசியப் பொருட்கள் வான்வழி விநியோகிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை, வெளிநாட்டு விமானப் படைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இரண்டாவது வான்வழி விநியோகம் ஆகும். இதுவரை, சிங்கப்பூர் ஒன்பது முறை காஸா மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பியுள்ளது.
வான்வழி விநியோகத்தை மேற்கொண்ட அதிகாரிகள் ஜோர்தானில் இருந்து சிங்கப்பூர் திரும்பியதாக அமைச்சகம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) தெரிவித்தது.
விநியோகிக்கப்பட்ட பொருட்களில், சுகாதார அமைச்சகம் வழங்கிய மருந்துகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் வழங்கிய உணவுப் பொருட்கள் அடங்கும். இந்த செயல்பாட்டை சாங்கி வட்டார மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு மையம் ஒருங்கிணைத்தது.
சிங்கப்பூர் ஆகாயப்படை, இதற்கு முன்பு 2024 மார்ச் 20ஆம் தேதி, காஸா மக்களுக்கு வான்வழியாக அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் ஆகாயப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் கெல்வின் ஃபான் கூறுகையில், “சிக்கலான சூழல்களிலும் குறுகிய காலத்தில் திறம்பட செயல்படும் ஆற்றலை எங்கள் ஆகாயப்படை கொண்டுள்ளது என்பதை இந்த வான்வழி விநியோகம் மீண்டும் நிரூபிக்கிறது,” என்றார்.
அத்துடன், இந்த மனிதாபிமான பணியில் பங்கேற்று ஆதரவு வழங்கிய ஆகாயப்படை வீரர்கள், தற்காப்புப் பங்காளிகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.





















