ஜோகூரில் 9 நாட்களில் போக்குவரத்து விதி மீறல்களுக்காக மொத்தம் 2,350 சம்மன்கள் விதிப்பு; 42 பேர் கைது

ஜோகூர் பாரு, ஏப்ரல் 19 :

மாநிலத்தில் ஏப்ரல் 9 முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட Op Khas Samseng Jalanan சிறப்பு நடவடிக்கையில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 2,350 சம்மன்கள் விதிக்கப்பட்டன.

போக்குவரத்து அமலாக்கப் புலனாய்வுத் துறையின் தலைவர் கண்காணிப்பாளர் எம் குமரேசன் கூறுகையில், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952ன் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 14 முதல் 53 வயதுடைய 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“இந்தச் சிறப்பு நடவடிக்கையில், 12,815 தனிநபர்கள் மற்றும் 10,035 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன, அவற்றில் 3,723 மோட்டார் சைக்கிள்கள் ஆகும்.

“இதற்கிடையில், சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 64 இன் படி விசாரணை மற்றும் மேலதிக நடவடிக்கைக்காக 208 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

“ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஒட்டி, சாகசம் செய்யும் குழுவின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சட்ட விரோதமான பந்தயம், ‘வீலிங்,’ ‘சூப்பர்மேன்’ போன்ற செயல்கள் மற்றும் தங்களுக்கும் பிற சாலைப் பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல்கள் ஆகியவற்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும்போது, ​​சாகசக் குழு பெருமைப்படுவதாக குமரேசன் விளக்கினார்.

“அவர்கள் பலமுறை விபத்துகளில் சிக்கியிருந்தாலும், அதே குற்றங்களுக்கு அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இந்த கலாச்சாரம் அவர்கள் மத்தியில் தற்போதைய ட்ரெண்ட் ஆகிவிட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here