சட்டவிரோதக் கட்டடங்களுக்குத் தண்ணீர், மின்சாரம் தடை! ரோஹிங்கியா குடியேற்றங்களை ஒடுக்க இங் கோர் மிங் அதிரடி உத்தரவு!

ஈப்போ:

முறையான திட்டமிடல் அனுமதி (Planning Permission) இன்றிச் சட்டவிரோதமாகக் கட்டப்படும் அனைத்துக் கட்டடங்களுக்கும் தண்ணீர் மற்றும் மின்சார விநியோகம் முற்றிலும் மறுக்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இங் கோர் மிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மலேசியாவில் ரோஹிங்கியா போன்ற வெளிநாட்டுச் சமூகங்களுடன் தொடர்புடைய சட்டவிரோதக் குடியேற்றங்கள் (Illegal Settlements) உருவாவதைத் தடுப்பதே இந்த கடுமையான கொள்கையின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“ரோஹிங்கியா அகதிகள் தொடர்பான விவகாரங்கள் குடிவரவுத் துறையின் (Immigration Department) அதிகார வரம்பிற்கு உட்பட்டவை ஆகும். அவர்கள் தொடர்ந்து சோதனைகளையும் அமலாக்க நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இருப்பினும், அரசாங்கத்தின் கொள்கை மிகவும் தெளிவானது. மனிதாபிமான அடிப்படையிலோ அல்லது அகதிகளாகவோ யார் நாட்டிற்குள் நுழைந்தாலும், அவர்கள் அரசாங்கத்தின் முறையான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்” என்று, இன்று நடைபெற்ற நடமாடும் பிரச்சார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் இங் கோர் மிங் கூறினார்.

சிலாங்கூர், ஹுலு லங்காட்டில் உள்ள சுங்கை தெக்காலி (Sungai Tekali) என்ற ஒதுக்குப்புறமான பகுதியில், ரோஹிங்கியா சமூகத்தினரால் அனுமதியின்றி நான்கு மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக வெளியான புகார்கள் குறித்துக் கேட்டபோதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தாண்டு மே மாதம் வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட 4,000-க்கும் மேற்பட்ட தீவிர அமலாக்க நடவடிக்கைகளின் மூலம், வெளிநாட்டினரால் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த 26,108 வணிக உரிமங்களை (Business Licences) அரசாங்கம் அதிரடியாக ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்தார். வெளிநாட்டினர் இங்கு தொழிலாளர்களாக மட்டுமே பணியாற்ற முடியும் என்றும், அவர்கள் சொந்தமாக வணிகம் செய்யவோ அல்லது அதன் உரிமத்தை வைத்திருக்கவோ சட்டத்தில் இடமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அரசாங்கத்திடம் தற்போது உரிமை கோரப்படாத தொகையாக (Unclaimed Money) சுமார் 13 பில்லியன் ரிங்கிட் நிதி தேங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பொதுமக்கள் தங்களின் நிலவரத்தை உடனே சரிபார்த்து அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு ஊக்குவித்தார்.

இதற்கான செயல்முறை மிகவும் எளிதானது என்றும், பொதுமக்கள் தங்களின் அடையாள அட்டை (IC) மற்றும் வங்கி அறிக்கை (Bank Statement) ஆகியவற்றை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது என்றும் கூறினார். 1965-ஆம் ஆண்டு உரிமை கோரப்படாத பணச் சட்டத்தின் பிரிவு 13(1)-இன் கீழ், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடப்படாமல் இருக்கும் நிதிகள் கணக்காய்வாளர் துறையின் கணக்கிற்கு மாற்றப்படும்.

இந்தப் பணம் அதற்குரிய உண்மையான உரிமையாளர்களுக்குச் சொந்தமானது என்பதால், மக்கள் தங்களின் பணத்தை மீட்பதற்கு உதவும் வகையில், இந்த வாரம் முதல் பேராக்கின் கெப்பாயாங் (Kepayang) சட்டமன்றத் தொகுதி தொடங்கி மாநிலம் முழுவதும் உள்ள பக்காத்தான் ஹரப்பான் (PH) மக்கள் பிரதிநிதிகள் களமிறங்கி சிறப்புப் பிரச்சாரங்களை முன்னெடுப்பார்கள் என்றும் அமைச்சர் இங் கோர் மிங் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here