அலோர் ஸ்டார், ஏப்ரல் 20 :
இன்று அதிகாலை 4.30 மணியளவில் பண்டார் பாருவுக்கு அருகிலுள்ள சுங்கை பகாப் குடிவரவுத் தடுப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்களில் எஞ்சியுள்ள 171 கைதிகளைக் கண்டறிய Op Kesan என்று அழைக்கப்படும் சிறப்பு நடவடிக்கைகளை கெடா மாநில காவல்துறை தொடங்கியுள்ளது.
171 கைதிகளில் 131 ஆண்கள், 28 பெண்கள் மற்றும் 12 சிறுவர்கள் அடங்குவர் என்று கெடா காவல்துறை தலைவர் வான் ஹசான் வான் அகமட் தெரிவித்தார்.
மேலும் கெடா காவல்துறையைத் தவிர, இந்த நடவடிக்கைகளில் பினாங்கு மற்றும் பேராக் காவல்துறையினர், குடிவரவுத் துறை, பொது நடவடிக்கைப் படை (GOF) மற்றும் காவல் நாய் (K-9) பிரிவு ஆகியவையும் ஈடுபடும் என்றார்.
“நாங்கள் Op Tutup ஐத் தொடங்குகிறோம், இது செபெராங் பிறை செலாத்தானில் நான்கு சாலைத் தடைகளையும், பண்டார் பாருவில் நான்கும் கூலிமில் ஐந்து சாலைத் தடைகளையும் உள்ளடக்கியிருக்கும் ,” என்று அவர் இன்று கெடா காவல் படைத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இன்று மொத்தம் 528 கைதிகள் தடுப்பு முகாம்களில் இருந்து தப்பிச் சென்றனர், அவர்களில் 357 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர் அத்தோடு ஜாவிக்கு அருகே Km168 தெற்கு நோக்கி வடக்கு-தெற்கு விரைவுச்சாலையைக் கடக்கும்போது கார்கள் மோதியதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
அனைத்து கைதிகளும் பிடிபடும் வரை எங்கள் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என்று வான் ஹாசன் கூறினார்.
அதேநேரம், கைதிகளை பாதுகாப்பது சட்டத்தை மீறும் செயலாகும் என்பதால், அதனை பொதுமக்கள் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் “விரக்தியில், கைதிகள் ஆபத்தானவர்களாகவும், குற்றங்களைச் செய்யவும் கூடும் என்பதால், கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.