தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர அறையில், சிக்கிக்கொண்ட 7 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 22 :

நேற்றிரவு, பண்டார் பாரு சுங்கை பூலோவில், தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரம் (ATM) உள்ள அறையில், அரை மணி நேரம் சிக்கிக்கொண்ட 7 பேர் மிக கஷ்டமான தருணங்களை எதிர்கொண்டனர்.

இரவு 12 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட 5 ஆண்களும் இரண்டு பெண்களும் ATM இயந்திர அறையில் சுமார் அரை மணி நேரம் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், நள்ளிரவு 12.09 மணிக்கு அழைப்பு தீயணைப்பு மாறும் மீட்புத் துறைக்கு தகவல் வந்ததையடுத்து, அவர்கள் நள்ளிரவு 12.15 மணிக்கு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு நிலைய இயக்குநர் நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் வங்கியின் ‘ஹாட்லைனை’ தொடர்பு கொண்டு, ATM இயந்திரம் உள்ள அறையினுள் மக்கள் சிக்கி இருப்பதாக தெரிவித்ததாக அவர் கூறினார்.

“ஆபரேட்டர் தீயணைப்பு படைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், ATM அறையில் சிக்கியவர்களை ‘ரோலர் ஷட்டரை’ திறக்க புரடக்சன் அறையில் உள்ள அவசர பொத்தானை அழுத்தினால் போதும் என்று கூறினார்.

“ரோலர் ஷட்டர்’ திறக்கப்பட்டதும், பாதிக்கப்பட்ட அனைவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியே வந்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முன்னதாக, தீயணைப்பு வீரர்கள் ATM அறையில் சிக்கிய பொதுமக்களுக்கு உதவுவதையும் அவர்களுடன் உரையாடுவதையும் காட்டும் 24 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here