கோலாலம்பூர், மே 11 :
இங்குள்ள கோம்பாக்கில் மோட்டார் வண்டியில் சாகசம் புரிந்த ஆடவர் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்ட நிலையில், நேற்றிரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து அமலாக்கப் புலனாய்வுப் பிரிவு மூலம் 28 வயது இளைஞன் வெற்றிகரமாகக் கண்டறியப்படுவதற்கு முன்பு, அவர் செய்த குற்றம் குறித்த 30 வினாடிகள் வீடியோ அனுப்பப்பட்டது.
யமஹா 135LC என்ற மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர், ஜாலான் சுங்கை துவா-உலு யாமில் மோட்டார் சைக்கிளின் முன்பக்க டயரை தூக்கி ஆபத்தான செயலில் ஈடுபட்டதாக கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஜைனல் முகமட் தெரிவித்தார்.
“கோம்பாக் போக்குவரத்து அமலாக்கப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டபோது, சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இன்று காலை செலாயாங் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதற்கு முன்னர் சந்தேக நபர் நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. நீதிமன்றம் சந்தேக நபருக்கு 4,000 வெள்ளி பிணையை அனுமதித்ததுடன், வழக்கு விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டது.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 42 (1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், RM5,000க்கு குறையாத RM15,000க்கு மிகாமல் அபராதமும் விதிக்கப்படலாம்.
BSPT Gombak, 03-61262222 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ போக்குவரத்துச் சட்டங்களை மீறுவதைக் கண்டறிந்தால், தமக்கு தகவல் தெரிவிக்குமாறு அவர் மேலும் அறிவுறுத்தினார்.









