இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

ஜெருசலேம்,மே 12:

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது.

இந்த நிலையில் மேற்குகரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் நேற்று காலை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அல் ஜசிரா செய்தி தொலைக்காட்சியின் பெண் பத்திரிகையாளரான ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டார். மேலும் அவருடன் இருந்ந அலி சமூதி என்கிற மற்றொரு பத்திரிகையாளர் படுகாயம் அடைந்தார்.

51 வயதான ஷிரீன் அபு அக்லே, பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டை குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி சேனலான அல் ஜசிரா தெரிவித்துள்ளது.

இது குறித்து அல் ஜசிரா வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் சக ஊழியரை வேண்டுமென்றே குறிவைத்து கொன்றதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளை வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை மூடிமறைக்க எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

ஆனால் தேடுதல் வேட்டையின்போது பாலஸ்தீன பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் துப்பாக்கிச்சூட்டில் காயங்களுடன் உயிர் தப்பிய பத்திரிகையளார் அலி சமூதி, இஸ்ரேல் ராணுவம் கூறுவது முற்றிலும் பொய் என்றும், ராணுவ வீரர்கள் தங்களை குறிவைத்தே சுட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

1997-ம் ஆண்டு முதல் அல் ஜசிரா பத்திரிகையாளராக பணியாற்றி வந்த ஷிரீன் அபு அக்லேவின் மறைவுக்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here