ஓராங் அஸ்லி இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த மனித வள மேம்பாட்டுக் கழகம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்- சரவணன்

கோலாலம்பூர், மே 14 :

மலேசியாவில் உள்ள ஓராங் அஸ்லி இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு, தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனித மூலதன மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த மனித வள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனுக்கு பணிப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் உடனான விவாதம் நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

அத்திட்டத்தின் முன்முயற்சியாக, மனித வள மேம்பாட்டுக் கழகமானது பேராக்கின் தாப்பாவில், 100 ஓராங் அஸ்லி குடும்பங்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நாடு முழுவதுமுள்ள முழு சமூகத்திற்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

“ஒராங் அஸ்லி இளைஞர்களுக்கு திறன்கள் மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்விரு நிறுவனங்களின் பலத்தையும் இந்த ஒத்துழைப்பு இணைக்கும்” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மனித வள மேம்பாட்டுக் கழகம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு இடையேயான ஒத்துழைப்பு, தொழில்நுட்பத் துறையை உள்ளடக்கிய உயர் திட்டங்களின் மூலம் ஓராங் அஸ்லி சமூகத்திற்கு பயனளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here