புத்ரா ஜெயா, மே 16 :
போதைக்கு அடிமையானவர் என நம்பப்படும் ஒருவர் ஓட்டிச் சென்ற கார், மோட்டார் சைக்கிளை மோதி இழுத்துச் சென்றதால், மோட்டார் சைக்கிள் ஒட்டுநர் சமிக்ஞை விளக்கு கம்பத்தில் மோதிக் காயமடைந்தார்.
புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் (IPD), துணை ஆணையர் A அஸ்மாடி அப்துல் அஜிஸ் கூறுகையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஜாலான் பெர்சியாரான் பெர்டானா / லெபுஹ் சௌஜானா போக்குவரத்து விளக்கு சந்திப்பில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, ஆரம்பகட்ட விசாரணையில் 29 வயதான கார் ஓட்டுநர், சிலாங்கூரில் உள்ள சுங்கை ஜரோமில் இருக்கும் தனது வீட்டிற்குத் திரும்புவதற்காக ப்ரீசிங்க்ட் 2 லிருந்து வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தார்.
சம்பவத்தின்போது, காரை நடுப் பாதையில் அவர் ஓட்டிச் சென்றபோது, 19 வயது இளைஞர் ஒருவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் 1மலேசியா பொது வீட்டுத் திட்டம் (PPAM) Larai, Precinct 6 இல் இருந்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோனாஸ் ப்ரிசிங்க்ட் 16 நிலையத்திற்கு வேலைக்குச் செல்வது விசாரணையில் கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.
கார் ஓட்டுநர் போதையில் காரை ஓட்டிச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும், சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபருக்கு மெத்தம்பேட்டமைன் மற்றும் ஆம்பெடமைன் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அஸ்மாடி கூறினார்.
மேலும், காரின் ஓட்டுநருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் தலையில் காயம் ஏற்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக புத்ராஜெயா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“சாலை போக்குவரத்து சட்டம் (APJ) 1987 இன் பிரிவு 44 (1) (a) இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் மேலும் இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள் புத்ராஜெயா IPD ஐ தொடர்பு கொள்ளலாம்,” என்றும் அவர் கூறினார்.










