ஜோகூர் பாரு:
ஜோகூர்–சிங்கப்பூர் இடையிலான நெருக்கமான உறவும் சிறந்த ஒத்துழைப்பும், ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கி வருவதாக ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.
2025 ஜனவரி முதல் இதுவரை ஜோகூர் மலேசிய முதலீட்டு வசதியாக்கல் மையம் வாயிலாக 1,436 முதலீட்டு விசாரணைகள் பெறப்பட்டுள்ளன. இதில் சிங்கப்பூரின் பொருளாதார மேம்பாட்டு வாரியம் சிங்கப்பூர் நிறுவன மேம்பாட்டு அமைப்பு ஆகிய அமைப்புகள் பரிந்துரைத்த 43 முதலீட்டு வாய்ப்புகளும் அடங்கும் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூருக்கான பணிப் பயணத்தின்போது அந்நாட்டின் தேசிய மேம்பாட்டு அமைச்சர் சீ ஹோங் டாட்-டை சந்தித்து கலந்துரையாடியதாக ஓன் ஹபிஸ் தெரிவித்தார். ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் திட்டத்தை திட்டமிடல் நிலையிலிருந்து முறையான செயல்பாட்டுக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
குறிப்பாக, இவ்வாண்டு இறுதியில் ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பெருந்திட்டம், முதலீட்டு செயல்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள், அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய முதலீட்டாளர்களை ஈர்ப்பது, விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கேற்பை அதிகரிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஜோகூருக்குள் வரும் முதலீடுகள் மாநிலப் பொருளாதாரத்திற்கு கூடுதல் மதிப்பை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக ஜோகூர் இளைஞர்களுக்கு அதிக வருமானம் தரக்கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், உள்ளூர் நிறுவனங்கள், விற்பனையாளர்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில்முனைவோர் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று ஓன் ஹபிஸ் வலியுறுத்தினார்.

ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் மூலம் உருவாகும் பொருளாதாரப் பலன்கள் ஜோகூர் மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் பரவலாகச் சென்றடைவதை உறுதி செய்வதே முக்கிய நோக்கமாகும் என்றார்.
சிங்கப்பூர் தேசிய மேம்பாட்டு அமைச்சர் சீ ஹோங் டாட்-வுடனான சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாகக் குறிப்பிட்ட ஓன் ஹபிஸ், ஜோகூர்–சிங்கப்பூர் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை முறையாகவும் திட்டமிட்ட வகையிலும் செயல்படுத்துவதற்கு இச்சந்திப்பு மற்றொரு முக்கிய முன்னேற்றமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
























