கால்வாயில் மூழ்கி 6 மற்றும் 4 வயது உடன்பிறப்புகள் மரணம்

பெரூவாஸ், மே 18 :

இங்குள்ள பந்தாய் ரெமிஸ், ஜாலான் செகாரி, பத்து 12 என்ற இடத்தில், நேற்று மாலை இரண்டு உடன்பிறப்புகள் தங்கள் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள கால்வாயில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

6 மற்றும் 4 வயதுடைய இரண்டு சகோதரர்களின் உடல்கள், அவர்களது 10 வயது மூத்த சகோதரரால் ஒரு கால்வாயில் கண்டெடுக்கப்பட்டன.

மஞ்சங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நோர் ஓமர் சாஃபி கூறுகையில், நேற்று மாலை 7 மணியளவில், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, செகாரி காவல் நிலையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 10 நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

போலிசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​இரண்டு சிறுவர்களின் சடலங்கள் வீட்டின் முன் மாடியில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்ததுடன், இரவு 7.15 மணியளவில் அங்கிருந்த பந்தாய் ரெமிஸ் சுகாதார மையத்தின் துணை மருத்துவ அதிகாரி அவர்கள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்”என்று அவர் இன்று வெள்ளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

அவரின் கூற்றுப்படி, இரண்டு குழந்தைகளும் அவர்களது மூத்த சகோதரரும் அங்குள்ள ஒரு வீட்டில் அவர்களது 36 வயது தாயுடன் வசித்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும் மாலை 5 மணியளவில் அவரது தாய் சமைத்துக்கொண்டிருந்தபோது அவரது வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்றுள்ளனர், 30 நிமிடங்களுக்குப் பிறகு அவர்களது தாயார், தனது இரு பிள்ளைகளையும் எங்குள்ளார்கள் என்று தேடுமாறு தனது மூத்த மகனிடம் கேட்டுள்ளார்.

“பாதிக்கப்பட்டவர்களின் சகோதரர், பின்னர் தனது இரண்டு இளைய சகோதரர்களையும் அருகிலுள்ள கால்வாயில் கண்டு, உடனடியாக அவரது தாயாருக்குத் தெரிவித்தார்.

பின்னர் பொதுமக்களின் உதவியுடன் இரு பிள்ளைகளும் மீட்கப்பட்டனர்.

இறந்த இருவரின் உடல்களும் மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காண, பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள ஸ்ரீ மாஞ்சாங் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாக நோர் ஓமர் கூறினார்.

இதுவரை விசாரணையில் குற்றவியல் கூறு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here