சிரம்பான், மே 20 :
இன்று, மலாக்கா வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி செல்லும் சாலையின் 252 ஆவது கிலோமீட்டரில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, மெர்லிமாவ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நள்ளிரவு 1.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யமஹா ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நந்தா மரோப் தெரிவித்தார்.
“விசாரணையின் முடிவுகளில், மெர்லிமாவ் பாலிடெக்னிக்கில் படிக்கும் முகமட் நௌஃபல் அம்ஜத் (19) என்பவர் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
“இதுவரை, சம்பந்தப்பட்ட மற்ற வாகனங்களைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகளுக்கு உதவக்கூடிய ஒரு சம்பவ இட சாட்சி இருக்கிறார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் விபத்து நடந்த இடத்தில் சாலையின் வடிவம் நேரான சாலையாக மூன்று ஒருவழிப் பாதையாகவும், தெரு விளக்குகள் இல்லாது இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
“பாதிக்கப்பட்டவரின் முகவரி கம்போங் பாங்கோல் தோக் ஜிரிங், கோலா திரெங்கானுவில் உள்ளது” என்று அவர் கூறினார்