2030-க்குள் 30,000 மின்சார வாகன (EV) சார்ஜிங் மையங்கள்: நாடாளுமன்றத்தில் MITI துணை அமைச்சர் உறுதி!

கோலாலம்பூர்:

மலேசியா பசுமை இலக்கை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 30,000 மின்சார வாகன (EV) சார்ஜிங் மையங்களை நிறுவுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் (Dewan Rakyat) தெரிவிக்கப்பட்டது.

போதிய சார்ஜிங் வசதிகள் இல்லாததால் மின்சார வாகனப் பயனர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது என்றும், இதனை நிவர்த்தி செய்யத் தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) உள்ளிட்ட பங்குதாரர்களுடன் இணைந்து உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் (MITI) துணை அமைச்சர் சிம் திசம்பூர் (Sim Tze Tzin) குறிப்பிட்டார்.

மேலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைப்பதற்குப் போதுமான மின்சாரம் தேவைப்படுவதால், அதற்குத் தேவையான துணை மின் நிலையங்களை (Substations) அமைப்பதில் TNB-உடன் அரசு நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்றார்.

குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வீரா டாக்டர் கு அப்துல் ரஹ்மான் கு இஸ்மாயில் எழுப்பிய துணை கேள்விக்கு பதிலளித்த சிம் மேலும் கூறுகையில், “சார்ஜிங் பாயிண்ட் ஆபரேட்டர்கள் (CPOs) அதிகளவில் சார்ஜிங் நிலையங்களை உருவாக்க ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சலுகைகள் (Incentives) வழங்குவது குறித்தும் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. போதிய மின்சாரம் மற்றும் துணை மின் நிலையங்கள் இல்லாமல் சார்ஜிங் மையங்களை உருவாக்க முடியாது.”

மின்சார வாகனத் தொழில்நுட்பம் உலகளவில் இன்னும் புதிய ஒன்றாகவே இருந்து வருகிறது என்றும், இதனால் உலக நாடுகள் பலவும் இதற்கான கொள்கைகள், சலுகைகள் மற்றும் அணுகுமுறைகளைத் தொடர்ந்து மாற்றி அமைத்து வருகின்றன என்றும் அவர் விவரித்தார்.

ஒரு முழுமையான EV சுற்றுச்சூழல் அமைப்பை (EV Ecosystem) உருவாக்குவதற்கு வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டும் போதாது, முறையான கொள்கைகளும் உள்கட்டமைப்பு முதலீடுகளும் அவசியம். இந்தச் செயல்முறைக்குச் சற்று கால அவகாசம் தேவைப்படும் என்றாலும், எழுப்பப்பட்டுள்ள கவலைகளை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் தனது முயற்சிகளைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்று துணை அமைச்சர் சிம் திசம்பூர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here