பெந்தோங், ஜூன் 3:
குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் மோட்டார் சைக்கிளில் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜாலான் பெந்தோங்கின், ரவூப் நோக்கிச் செல்லும் சாலையின் 4-ஆவது கிலோமீட்டர் பகுதியில் நேற்று நடந்த விபத்தில், முகமட் நோர் இசாத் அப்துல் கரீம், 22, என்ற பாதிக்கப்பட்டவர் பெந்தோங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து இரவு 10.15 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பெந்தோங் மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் சைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.
“ரவூப்பில் இருந்து பெந்தோங் நோக்கிப் பயணித்த 65 வயதுடைய நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற நான்கு சக்கர வாகனம், எதிர் பாதையில் நுழைந்து பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.
போலீசார் விசாரணையின் அடிப்படையில், நான்கு சக்கர வாகன ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணைக்காக அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் இன்று தொடங்கி ஜூன் 8 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 44 (1) இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும் Zaiham கூறினார்.
சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.