அமெரிக்க எழுத்துக்கூட்டுதல் (Spelling Bee) போட்டியில் இந்திய வம்சாவளிச் சிறுமி வெற்றி

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்க்ரிப்ஸ் தேசிய எழுத்துக்கூட்டுதல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது ஹரிணி லோகன் வெற்றி பெற்றிருக்கிறார்.

டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிணி, பரபரப்பு நிறைந்த இறுதிப்போட்டியில் 12 வயது விக்ரம் ராஜுவை வெற்றி கொண்டு கோப்பையைக் கைப்பற்றினார்.

இறுதிப் போட்டியாளர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அதனால் குறைந்த நேரத்தில் நிறைய சொற்களை எழுத்துக்கூட்டிச் சொல்லும் போட்டியாளருக்கு வெற்றி என்று தீர்மானிக்கப்பட்டது.

97 ஆண்டுகளாக நடைபெறும் ஸ்க்ரிப்ஸ் தேசிய எழுத்துக்கூட்டுதல் போட்டியில் அத்தகைய சுற்றை ஏற்பாட்டாளர்கள் வைத்தது இதுவே முதல் முறையாகும்.

ஹரிணி 90 வினாடிகளில் 26 சொற்களை எழுத்துக்கூட்டிச் சொன்னார். அதில் 21 சரியானவை.

அவரது போட்டியாளரான விக்ரம், 90 வினாடிகளில் 19 சொற்களை எழுத்துக்கூட்டிச் சொன்னார். அதில் 15 சரியானவை. அதனால் ஹரிணிதான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் ஹரிணி இறுதிப்போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் எழுத்துக்கூட்டிய சொல்லின் பொருளைச் சரியாக சொன்னாரா என்ற சந்தேகமே அதற்குக் காரணம். ஆனால் ஹரிணி சரியான பொருளைத் தான் விளக்கினார் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் மீண்டும் போட்டியில் சேர்க்கப்பட்டார்.

ஸ்க்ரிப்ஸ் தேசிய எழுத்துக்கூட்டுதல் போட்டியில் இந்திய வம்சாவளியினர் தான் பல ஆண்டுகளாக கோலோச்சி வந்துள்ளனர். ஆனால் 2021ல் முதல் முறையாக ஆப்பிரிக்க அமெரிக்கரான ஸைலா அவான்ட்கார்ட் வெற்றி பெற்றார்.

2020ல் கோவிட்-19 காரணமாக போட்டி நடக்கவில்லை.

2019ல், எட்டுப் பேருக்கு வெற்றிக் கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது. அவர்களில் ஏழு பேர் இந்திய வம்சாவளியினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here