ஈப்போ, ஜூன் 10 :
இங்குள்ள ஜாலான் சுல்தான் அப்துல் ஜலீலில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த சோதனையில், RM87,979 மதிப்புள்ள பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் வண்ணங்கள் கொண்ட மொத்தம் 2,845 போலிக் காலணிகள் பேராக் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தினால் பறிமுதல் செய்யப்பட்டன.
பேராக் KPDNHEP இயக்குநர் சைஃபுலிசான் கமாருல் ஜமான் கூறுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரபலமான பிராண்டுகளின் போலிக் காலணி விற்பனை தொடர்பானப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து, பதிப்புரிமை உரிமையாளர்களின் புகார்கள் மற்றும் தகவல்களுக்குப் பிறகு காலை 10.30 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்றார்.
“1,245 ஜோடி பெண்கள் காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டன, அத்துடன் லேபிள்கள் கொண்ட 800 பிளாஸ்டிக் பைகள் மற்றும் 800 பிராண்டுகளின் ஸ்டிக்கர்களும் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.
சோதனையின் போது, வளாகத்தின் உரிமையாளர் என நம்பப்படும் 51 வயதுடையவர் மற்றும் 38 வயதான பெண் ஊழியர் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்ததாக அவர் கூறினார்.
இவ்வழக்கு வர்த்தக முத்திரை சட்டம் 2019 இன் பிரிவு 102(1)(c) இன் கீழ் விசாரிக்கப்பட்டது.
வர்த்தகர்கள், குறிப்பாக பேராக்கில் உள்ளவர்கள், அமைச்சகம் வகுத்துள்ள அனைத்து வணிகச் சட்டங்களுக்கும் இணங்க வேண்டும் என்றும் போலிப் பொருட்களை விற்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
“நுகர்வோர் இ-அடுவான் போர்ட்டல் மூலமாகவோ அல்லது 1 800 886 800 என்ற எண்ணில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ கள்ளப் பொருட்களைப் பற்றிய தகவல் அல்லது புகார்களை அமைச்சகத்திற்கு அனுப்பலாம்.
மேலும் “அவர்கள் 019-279 4317 என்ற எண்ணில் Ez ADU KPDNHEP செயலி அல்லது Whatsapp ஐப் பயன்படுத்தலாம், அத்துடன் 05-2414611 என்ற மாநில KPDNHEP செயல்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம்” என்று அவர் கூறினார்.








