கோலாலம்பூர், ஜூன் 12 :
மலேசியாவின் பொருளாதார மீட்பு முயற்சிகளுக்கு மதிப்பளித்து, நாட்டை உயர் நிலைக்கு கொண்டு வருவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று பாஸ் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
மக்கள் மற்றும் பிற கட்சிகள் கொடுத்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யக்கூடாது என்று பாஸ் கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் கைரில் நிஜாம் கிருதின் கூறினார்.
“அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, கட்சியின் ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மைக்காக அம்னோ தேர்தலை ஒத்திவைக்க விரும்புவதைப் போலவே, நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவது எல்லாவற்றிற்கும் மேலாக தற்போதைய அரசாங்கத்தின் கடமையாகும்.
“தற்போதைய அரசாங்கத்திற்கு பாஸ் கட்சி ஆத்தாவழிப்பதன் நோக்கம், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் செய்ததை விட மக்கள் நலனில் அக்கறை காட்டுவதையும், நாடு சிறப்பாக நிர்வகிக்கப்படுவதையும் உறுதி செய்வதாகும்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
எனவே, ஒரு கட்சியின் அதிகாரப் போட்டிக்குள் மக்களை இழுக்கக் கூடாது என்று கைரில் நிஜாம் சுட்டிக்காட்டினார்.
“இப்போது நாடு எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளான பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் அதிகரித்து வருவது மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு சுமையாக உள்ளது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, மாறாக அரசாங்கத்தில் யார் மேலாதிக்கம் செலுத்துவது என்ற கட்சிப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அல்ல, ” என்று அவர் மேலும் கூறினார்.










