ஜோகூரில் நேற்றுவரை 6,987 பேருக்கு கை, கால் மற்றும் வாய் நோய் வழக்குகள் பதிவு

இஸ்கந்தர் புத்திரி, ஜூன் 19 :

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நேற்று வரை மொத்தம் 6,987 கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) வழக்குகள் ஜோகூரில் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 104 வழக்குகள் பதிவாகியிருந்தன என்று ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

மாநில சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் கூறுகையில், ஆறு மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளிடையே இந்நோய் மிக அதிகமாக, அதாவது 6,048 வழக்குகள் (86.6 சதவீதம்) பதிவாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து ஏழு முதல் 12 வயது வரையிலான குழந்தைகளை உள்ளடக்கிய 816 வழக்குகள் (11.7 சதவீதம்) பதிவாகின, மீதமுள்ளவர்கள் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அடங்குவர்.

இருப்பினும், இவ்வழக்கின் தீவிரம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது என்று, இன்று சுல்தான் இஸ்மாயில் கட்டிடத்தில் நடந்த 15ஆவது ஜோகூர் மாநில சட்டசபையின், முதல் அமர்வின் இரண்டாவது கூட்டத்தில், வாய்மொழி கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

குரங்கம்மை தொடர்பில், இன்றுவரை மலேசியாவில் எந்த ஒரு வழக்கும் பதிவாகவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

“இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின் அடிப்படையில், மலேசியாவிற்கு குரங்கம்மை நுழையும் அபாயம் மிகக்குறைவாகவுள்ளதுடன் அவ்வாறு ஏற்பட்டாலும் கூட அவற்றை எதிர்கொள்ளும் மூலோபாயத் திட்டத்தின் அடிப்படையில், ஜோகூர் சுகாதாரத் துறை எப்போதும் தயார் நிலையில் உள்ளது” என்றும் லிங் கூறினார்.

குழந்தைகளிடையே கை, கால் மற்றும் வாய் நோய் மற்றும் குரங்கம்மை போன்ற தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்க மாநில அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து டத்தோ ரம்லி போஹானி (BN-Kempas) என்பவரின் கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here