நாட்டின் எட்டாவது செயற்கைக்கோளான மீசாட்-3டி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு பேரரசர் வாழ்த்து

கோலாலம்பூர், ஜூன் 23 :

இன்று அதிகாலை, நாட்டின் 8ஆவது செயற்கைக்கோளான மீசாட்-3டி (MEASAT-3d) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக, மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அரசு மற்றும் மீசாட் குளோபல் பெர்ஹாட் (MEASAT) நிறுவனத்திற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

RM1.2 பில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இந்த மீசாட்-3டி செயற்கைக்கோள், தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள Kourou ஐரோப்பிய விண்வெளி மையத்தில் இருந்து, மலேசிய நேரப்படி காலை 5.50 மணிக்கு (ஜூன் 22 உள்ளூர் நேரப்படி மாலை 6.50 மணிக்கு) விண்ணிற்கு ஏவப்பட்டது.

இது 18 ஆண்டுகள் காலம் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டது என்றும் இதன் பரந்த வலையமைப்பு ஊடாக நாட்டிற்கு வேகமான இணைய சேவைகளை வழங்கும் என்றும் நம்பப்படுகிறது.

CONNECTme NOW சேட்டிலைட் பிராட்பேண்ட் சேவையின் மூலம் Measat 3d வழங்கும் ஃபைபர் அல்லது வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்புகளால் இன்னும் மூன்று முதல் ஐந்து விழுக்காடு மக்கள் தொகைக்கு தரவு, குரல் மற்றும் வீடியோ சேவைகளை வழங்க மற்ற தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் செயற்கைக்கோளைப் பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

பிஜேயா திராஜா இஸ்தானா நெகாராவின் அமைப்பாளர் டத்தோ அஹ்மத் ஃபதில் ஷம்சுதீன் கூறுகையில், ‘இந்த வெற்றியின் மூலம் மலேசிய தீபகற்பம், சபா மற்றும் சரவாக் முழுவதும் நகர்ப்புற, புறநகர் அல்லது கிராமப்புறங்களில் உள்ள மக்களும் அதிவேக இணையத்தை செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகள் மூலம் அனுபவிப்பார்கள்’ என்று மாட்சிமை தங்கிய பேரரசர் தெரிவித்ததாக இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், “தேசிய டிஜிட்டல் நெட்வொர்க் (ஜெண்டேலா) திட்டத்தின் மூலம் டிஜிட்டல் இணைப்பு இடைவெளியைக் குறைக்கவும், நாட்டில் உள்ள எந்தவொரு மக்களையும் ஓரங்கட்டாமல் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் சமுதாயத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் இந்த முன்முயற்சிக்கு தாமும் ஆதரவளிப்பதாகவும்” மாட்சிமை தங்கிய பேரரசர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here