அலோர் ஸ்டார், ஜூன் 26 :
நேற்று பாலிங் அருகே உள்ள ஜாம்பாடான் பந்தாய் சிகார், கோலக் கெட்டில் என்ற இடத்தில், புரோட்டான் பெர்சோனா கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன மூவரும் மஷிதோ இப்ராகிம், 37, மற்றும் அவரது இரு மகன்கள் முகமட் ஜியாத் ஜிக்ரி ஷருதின், 7, மற்றும் முகமட் ஜியாத் ஹாசிக், 5 என அடையாளம் காணப்பட்டதாக பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஷம்சுதின் மாமட் தெரிவித்தார்.
“ஒரு மீட்புப் படகில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ஐந்து பணியாளர்கள் இப்போது ‘கிராப்பிங் அயர்ன்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆற்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
“பாதிக்கப்பட்டவர்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் புதிய முன்னேற்றங்கள் குறித்து அவ்வப்போது புதுப்பிப்போம்” என்று அவர் நேற்று வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் கூறினார்.
இதற்கிடையில், கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர், துணை தீயணைப்பு ஆணையர் சியுஃபாத் கமரோன் கூறுகையில், மாலை 6.42 மணிக்கு கார் ஆற்றில் விழுந்தது குறித்து தங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது என்றார்.
“சம்பவத்தின்போது ஆறு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
“நீர் மேற்பரப்பில் தேடுதலை நடத்தி வரும் மீட்புப் பணியாளர்களால் வாகனத்தின் நிலையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை, அத்தோடு கிராம மக்களுக்குச் சொந்தமான பல படகுகளும் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்டன” என்றும் அவர் கூறினார்.