தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விக்ரம். ‘சேது’ தொடங்கி ‘கோப்ரா’ வரை பல படங்களில் தன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. விக்ரமின் உடல்நிலை குறித்து அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம்.
அவர்கள், “விக்ரம் இரண்டு நாள்களாகவே கடுமையான காய்ச்சலில் இருந்தார். அவர் வீட்டில் இருக்கும்போது திடீரென நெஞ்சுப் பகுதியில் அசௌகரியமாக உணர்ந்ததால், நேற்று அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து வந்தோம். மூத்த இதய நிபுணர் ஒருவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்குப் பரிசோதனைகளைச் செய்து உடனடி சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் உடல்நலம் தேறி வருகிறார். மருத்துவமனையிலேயே அவர் இரண்டு நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். நாளை டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றனர்.