மனித மூளையின் அளவு விரிவடைகிறது; விஞ்ஞானிகள் தகவல்!

நாளுக்கு நாள் அளவில் பெருக்கும் மூளை காரணமாக மனிதர்கள் சற்று வீங்கிய தலையுடன் நடமாடக்கூடும்; ஆனால் அவை நன்மைக்கு வித்திடுவதாய் தெரிவிக்கிறது அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வு ஒன்று.

பரிணாம வளர்ச்சியில் உயிர்கள் அனைத்துமே தனக்கு தேவையானதை வளர்த்துக் கொள்வதும், தேவையற்றதை நீக்கிக்கொள்ளவும் செய்யும். காலத்தின் போக்கில் நீண்ட இடைவெளியில் மட்டுமே இந்த வித்தியாசங்கள் புலப்படும். ஆனால் நவீன அறிவியல் ஆய்வு மனித உடலின் சிறிய மாற்றத்தையும் எளிதில் கண்டறிந்து வருகிறது.

குரங்கின் வழி தோன்றியதாக சொல்லப்பட்டும் மனித இனத்துக்கு அவசியமில்லாததன் காரணத்தினால் வால் என்ற உறுப்பு காணாமல் போயிருக்கிறது. அசைவு உணவுகளை அப்படியே உண்ணும் வேட்டை மனிதன் காலத்திலிருந்து தற்போது சமைத்து உண்ணும் மனிதனின் பற்கள் அதற்கேற்ப உள்ளடங்கி போயிருக்கின்றன. இப்படி தேவையற்றவை குறைவது போன்றே, தேவையானதன் அளவு அதிகரிக்கவும் செய்கிறது.

சிந்தனையின் வழியே மனித நாகரிகம் முன்னேறி வருவதால், அதற்கு அவசியமான மூளையின் பயன்பாடு தலைமுறைகள் தோறும் அதிகரித்து வருகிறது. அதற்கொப்ப மூளையின் அளவும் அதிகரித்து வருவதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் – டேவிஸ் ஹெல்த் ஆராய்ச்சியாளர்களின் அண்மை ஆய்வு இதனை நிரூபித்துள்ளது.

இதன்படி 1930-களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மூளையின் அளவு படிப்படியாக அதிகரித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1930களில் பிறந்தவர்களோடு ஒப்பிடுகையில், 1970களில் பிறந்தவர்களின் மூளை 6.6 சதவீதம் பெருத்துள்ளது. பொதுவாக மூளையின் அளவை தீர்மானிப்பதில் மனிதர்களின் மரபியல் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் கலிபோர்னியா ஆய்வாளர்கள், உடல்நலம், சமூகம், கலாச்சாரம் மற்றும் கல்வி என வெளிப்புற தாக்கங்களின் அடிப்படையிலே தங்கள் ஆய்வை முன்னெடுத்தனர்.

ஃப்ரேமிங்ஹாம் ஹார்ட் ஸ்டடி என்ற தலைப்பிலான ஆய்வின் பங்கேற்பாளர்களுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் கொண்டு தரவுகள் திறட்டப்பட்டன. இதயம் மற்றும் மூளை உள்ளிட்ட நோய்களின் தாக்கங்களை இந்த வகையில் ஆய்வு செய்தனர். 1948ல் தொடங்கிய இந்த ஆய்வில் 30 – 62 வயதுக்குட்பட்ட 5,209 ஆண் – பெண்கள் இருந்தனர். ஆராய்ச்சி 75 ஆண்டுகளாக தொடர்ந்தது.

யுசி டேவிஸ் என்பவர் தலைமையிலான ஆராய்ச்சி 1930களில் பிறந்தவர்களின் எம்ஆர்ஐகளை 1970களில் பிறந்தவர்களுடன் ஒப்பிட்டது. இது பல மூளை கட்டமைப்புகளில் படிப்படியான ஆனால் சீரான அதிகரிப்புகளைக் கண்டறிந்தது. இந்த மூளை அளவு அதிகரிப்பதற்கும், வயதானவர்களை அதிகம் முடக்கும் நினைவுத்திறன் சார்ந்த ஆரோக்கிய பாதிப்புகளான டிமென்ஷியா மற்றும் அல்சைமர் ஆகியவற்றுக்கு நேரடித் தொடர்பையும் கண்டறிந்தனர். அதாவது, மூளையின் அளவு அதிகரிப்பதன் காரணமாக அல்சைமர், ட்மென்ஷியா ஆகியவற்றின் பாதிப்புகள் குறைந்து வருகின்றன.

எதிர்காலத்தில் மனிதர்கள் அளவில் அதிகரித்த மூளை காரணமாக, கனத்த தலையுடன் உலா வரக்கூடும். ஆனால், அவர்கள் நடப்பு தலைமுறையை அதிகம் அச்சுறுத்தும் டிமென்ஷியா, அல்சைமர் உள்ளிட்ட நினைவுத்திறன் சார்ந்த நோய்களுக்கு அநேகமாக விடை தந்திருப்பார்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here