சிரம்பான், ஜூலை 15 :
கம்போங் பெம்பான் ஹிலிரில் உள்ள சட்டவிரோத களஞ்சியமாக செயல்பட்ட வளாகத்தில், மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் சோதனை நடத்தியதில் 31,215 லிட்டர் மானிய விலை டீசல் முறைகேட்டில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த நால்வரை கைது செய்தது.
அதன் தலைமை அமலாக்க அதிகாரி அப்துல் முயிஸ் சம்சுடீன் கூறுகையில், நேற்று (ஜூலை 14) மாலை 5.30 மணிக்கு நடந்த சோதனையின் போது, ஒரு டேங்கர் லோரி, ஒரு ஸ்கிட் டேங்க், ஸ்கொயர் டேங்க் மற்றும் எரிபொருளை மாற்றப் பயன்படுத்திய பயன்படும் மற்ற கருவிகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, இதன் மதிப்பு மொத்தம் RM269,912.25 என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டேங்கர் லோரியில் இருந்து எரிபொருளை தொட்டிக்குள் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 29 முதல் 42 வயதுடைய நான்கு உள்ளூர் ஆட்களும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“மேலும் சோதனைகளில் வளாகத்தில் மானிய விலை டீசல் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செல்லுபடியாகும் உரிமம் அல்லது விநியோக கட்டுப்பாட்டாளரிடமிருந்து எந்த ஆவணங்கள் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தக் கும்பல், சிரம்பான் நகரைச் சுற்றியுள்ள ஏராளமான பெட்ரோல் நிலையங்களில் இருந்து மானிய விலையில் டீசலை வாங்கி, டீசலை சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பி வைத்து, அங்கேயே வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது என்றார்.
கடந்த ஆறு மாதங்களாக இந்தக் கும்பல் செயல்பட்டதாக நம்பப்படுவதாக அப்துல் முயிஸ் கூறினார்.
இந்த வழக்கு விநியோக கட்டுப்பாடு சட்டம் 1961 பிரிவு 21 மற்றும் 20(1)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும், சட்டத்திற்கு இணங்காத நடவடிக்கைகள் அல்லது வர்த்தகர்கள் பற்றிய தகவல்களுடன் பொதுமக்கள் தங்கள் புகார்களை https://eaduan.kpdnhep.gov.my அல்லது 019-279 4317என்ற எண்ணில் WhatsApp மூலம் தெரிவிக்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.