80 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு உதிரிபாகங்ளின் கடத்தலை முறியடித்த சுங்கத்துறை

போர்ட் கிள்ளானுக்கு வந்த கப்பலின் கொள்கலனில் 80 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள யானை தந்தங்கள், காண்டாமிருகத்தின் கொம்புகள், பாங்கோலின் செதில்கள் மற்றும் புலிப் பற்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் பாகங்களை கடத்தும் கும்பலின் முயற்சியை ராயல் மலேசியன் சுங்கத் துறை (JKDM) முறியடித்துள்ளது. ஜூலை 10 ஆம் தேதி போர்ட் கிள்ளான் மேற்கு துறைமுகத்தில் இந்த கொள்கலன் கைப்பற்றப்பட்டது. இது வனவிலங்கு பாகங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பறிமுதல் என சுங்கத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ சாசுலி ஜோஹன் கூறினார்.

முன்னதாக, 2012 இல் முறையே RM40 மில்லியன் மற்றும் RM2.4 மில்லியன் மதிப்புள்ள பாங்கோலின் செதில்கள் மற்றும் யானை தந்தங்களை கைப்பற்றியபோது JKDM பெரிய வெற்றியைப் பெற்றது. ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்ததாக நம்பப்படும் கொள்கலன், ஜோகூரில் உள்ள பாசீர் கூடாங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, வேறொரு கப்பலுக்கு மாற்றப்பட இருந்தது. ஆனால், கடத்தல் குறித்த தகவல் கிடைத்ததும், மேற்கு துறைமுகத்தில் கொள்கலனை மறித்தோம் என இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கொள்கலனை சோதனை செய்ததில், சுமார் 6,000 கிலோ எடையுள்ள யானை தந்தங்கள், 29 கிலோ காண்டாமிருக கொம்புகள், 100 கிலோ பாங்கோலின் செதில்கள், 14 கிலோ வனவிலங்கு கொம்புகள், 300 கிலோ விலங்கு மண்டை ஓடுகள் மற்றும் அடுக்கப்பட்ட மரக்கட்டைகளுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், இறக்குமதியாளர் மற்றும் கப்பல் முகவர்கள் மீதான விசாரணைகள் நடந்து வருவதாகவும் ஜாசுலி கூறினார். மலேசியத் துறைமுகங்கள் வழியாக சட்டவிரோதமான அல்லது வரி செலுத்தப்படாத பொருட்களைக் கடத்த முயன்றதற்காக சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135 (1) (a) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here