
கோலாலம்பூர், ஜூலை 25 :
மாற்றுத்திறனாளியும் தேசிய மலை ஏறுபவருமான டி.ரவிச்சந்திரன், பாகிஸ்தானில் உள்ள உலகின் இரண்டாவது உயரமான மலையான K2 உச்சியில் மலேசிய தேசிய கொடியை பறக்கவிட்ட முதல் மலேசியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
“ரவி எவரெஸ்ட்” என்றும் அழைக்கப்படும் 57 வயதான அவர், வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10.50 மணிக்கு 8,611 மீ உயரமான K2 உச்சியை அடைந்தார், மேலும் அவருடன் இணைந்து ஐந்து உலகத் தரம் வாய்ந்த மலை ஏறுபவர்களுடன் சேர்ந்து, அவர் இச்சாதனையை புரிந்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து, தனது இந்த வெற்றிச் சாதனையை மலேசியாவிற்கு பரிசாக சமர்ப்பிப்பதாக ரவிச்சந்திரன் கூறினார்.
“நாட்டின் மீதான அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்வது, இவைதான் எனக்குள் பதிக்கப்பட்ட ஒற்றுமைக்கான திறவுகோல்கள், இதுவே மலை ஏறும் காலம் முழுவதும் சிரமங்களை எதிர்கொள்வதில் எனக்கு பலமாக இருந்தது.
“என் வெற்றிக்கு பலமாகவுள்ள என் மனைவிக்கும் நன்றி..”
“குடும்பத்தினர், நண்பர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் மலேசியர்களின் பிரார்த்தனைகளை அனைத்தும் ஒன்று சேர்ந்தே, நான் மலை உச்சியை அடைய என்னை ஊக்கப்படுத்தியது” என்று அவர் நேற்று ஒரு வாட்ஸ்அப் செய்தியில் கூறினார்.
மேலும் தான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருப்பது தனக்கு ஒரு தடையல்ல என்றும் – மாறாக, ஒரு ஊனமுற்றவர் கூட வலிமையானவராகவும் மற்றவர்களுடன் சமமாக இருக்கவும் முடியும் என்பதை இந்த சாதனை நிரூபித்துள்ளது என்றார்.