கம்பளத்தில் சுற்றப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு – வெளிநாட்டவர் என நம்பப்படுகிறது

குவா மூசாங், ஜூலை 26 :

இங்குள்ள குவா மூசாங்-லோஜிங்கில் உள்ள வெந்நீர் குளம் அருகே, நேற்று கம்பளத்தில் சுற்றப்பட்டு கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் வெளிநாட்டவர் என நம்பப்படுகிறது.

குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ கூறுகையில், மூன்று மணிநேரம் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில், BCG (Bacillus Calmette Guerin) நோய்த்தடுப்பு ஊசியின் எந்த அறிகுறியும் சடலத்தில் காணப்படவில்லை.

ஏற்கனவே சடலம் அழுகியதாலும், புழுக்கள் இருந்ததாலும் பாதிக்கப்பட்டவர் 36 மணி நேரத்திற்கும் மேலாக இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

“பாதிக்கப்பட்டவர் நீண்ட கையுள்ள நீல நிற சட்டை மற்றும் கைலி (sarong) அணிந்திருந்தார் மற்றும் அவரது வலது கையில் பறவை போன்ற வடிவத்தில் பச்சை குத்தியிருந்தார்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

பிரேதப் பரிசோதனை முடிவுகளில், பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், குற்றச் செயல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் வேறொரு இடத்தில் இறந்து பின்னர் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் போடப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவரின் வயது எங்களுக்குத் தெரியாது”.

“உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் குடியிருப்பு பகுதியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இதுவரை, பாதிக்கப்பட்டவருடன் தொடர்புடைய எந்த அடையாள ஆவணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை மற்றும் வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

நேற்று இரவு 8.30 மணியளவில், ஒருவர் லோஜிங் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, சடலம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் தகவல் தெரிவித்தார் என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான 29 வினாடி வீடியோ பதிவு டிக் டாக் செயலியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here