காரில் அடிபட்ட யானையின் நிலை என்ன?: பெர்ஹிலிதான் தீவிர கண்காணிப்பு!

கோலாலம்பூர்:

திரெங்கானு, கெமாமன் அருகே ‘பெரோடுவா அக்ரிவா’ ரக SUV வாகனம் மோதி காயமடைந்த காட்டு யானை ஒன்றை வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறை (Perhilitan) அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று இரவு 7.51 மணியளவில் ஜெரங்காவு சாபோர் சாலையின் 160ஆவது கிலோமீட்டரில் கம்போங் சுங்கை பெர்காம் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சாலையைக் திடீரெனக் கடக்க முயன்ற காட்டு யானை மீது வாகனம் மோதியதில், காரில் பயணித்த கணவன், மனைவி உட்பட மூவர் காயமடைந்தனர்.

இரவு 9 மணிக்குச் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சோதனையிட்டபோது, யானை அருகில் உள்ள பாமாயில் தோட்டத்திற்குள் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. அது புக்கிட் பண்டி காப்பகக் காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

காயமடைந்த யானையின் நிலையைக் கண்டறியவும், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் பெர்ஹிலிதான் அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here