ஜெம்போலில் ஐந்து வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தது தொடர்பில், இந்திய தம்பதி மற்றும் மகளை போலீசார் தேடுகின்றனர்

ஜெம்போல், ஜூலை 29 :

ஐந்து வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் விசாரணைக்கு உதவும் பொருட்டு, ஒரு மலேசிய இந்திய தம்பதியையும் அவர்களது 21 வயது மகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை (ஜூலை 27) சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடமிருந்து புகாரைப் பெற்ற பின்னர், போலீசார் விசாரணையைத் தொடங்கியதாக மாவட்ட காவல்துறைத் தலைவர், ஹூ சாங் ஹூக் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு காயங்கள், வீக்கம் மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உடல் முழுவதும் பழைய தழும்புகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

“காவல்துறையில் புகாரளிப்பதற்கு முன்பே மூன்று நபர்களும் காணாமல் போயுள்ளார்கள்,” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 29) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வேறு மாநிலத்தில் பணிபுரிந்ததால், சிறுமியை பராமரிக்கும்படி தம்பதியரிடம் அனுப்பியதாக அவர் கூறினார். அதற்காக மாதாந்தம் பணம் செலுத்தியதாகவும் அவர் கூறினார்.

விசாரணையில் உதவுவதற்காக தாமான் ஸ்ரீ மஹ்சான், பண்டார் ஸ்ரீ ஜெம்போல் எனும் முகவரியில் வசிக்கும், பாதிக்கப்பட்டவரின் மாமா மற்றும் அத்தை மற்றும் அவர்களின் மகள் ஆகியோரை போலீசார் தேடி வருவதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் தற்போது சிகிச்சைக்காக கோலப்பிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துஷ்பிரயோகம் மே 26 அன்று தொடங்கியது என்றும் பாதிக்கப்பட்டவர் மற்றொரு அத்தையால் மீட்கப்பட்டதாகவும் ஹூ கூறினார்.

“சந்தேக நபர்களைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், தகவல் தருபவர்களது விபரம் பாதுகாக்கப்படும்” என்று அவர் கூறினார்.

குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)(a) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here